நிழற்சாலை

By காமதேனு

ஆகப் பெரிய ஆசைகளற்ற வீடு

அப்படியொன்றும் எளிதானதில்லை
வாடகைக்கொரு வீடு வாய்ப்பது
அலைச்சலும்
உளைச்சலுமே மிச்சமாய்.
வீதிகள்தோறும் வீடுகளில்லாமல் இல்லை
அவனுக்கான வீடுதான்
எதுவென்று விளங்கவில்லை.
ஆகப் பெரிய ஆசைகளெதுவும்
அவனுக்கில்லை
மகன் மீன்தொட்டி வைத்துக்கொள்ள
சின்னதாக ஒரு மாடம்.
குளித்துவிட்டுத் துணி மாற்ற
மனைவிக்கு
மறைவாய் ஓர் அறை.
வேலைவிட்டு வந்து
காலைநீட்டிப் படுக்க
அறையிருந்தால் நிம்மதி அவனுக்கு.
உள்ளே நுழைந்ததுமே
வீடே முடிந்துபோனதாய்
உறவுகளின் கேலி
பழகிப்போன வலி.
அடுத்த முறை அமையும் வீடாவது
அவமானங்களை அகற்றிவிடாதாவென
தவிக்கும் மனசு.
வீடு என்பது கட்டப்படுவதென
யார் சொன்னது?
வீடு என்பது அமைவது!
- காசாவயல் கண்ணன்

ஃபீனிக்ஸ் சிறகுகள்

சாம்பலைப் படர்த்திக்கொண்டு
உயர்த்திப் பிடிக்கிறது
வெண்கொடியை
நம்பிச் சென்ற புறா
வேகமெடுக்க முடியாமல்
சிதறிக் கிடக்கிறது
பாறை இடுக்குகளில்
யுகாந்திரமாய்
மடிந்து கிடந்த
அடுக்கின் வெம்மை
அடர் புகையாய்
வான் முட்டுகிறது
காலங்கள் புகையாய் மறைய
எஞ்சிய சாம்பலிலிருந்து
மீண்டும் உயிர்த்தெழுகிறது
அந்தப் புறா!
- ஸ்ரீகா

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE