வெ.சந்திரமோகன்
chandramohan.v@hindutamil.co.in
கால்பதிக்கும் இடமெல்லாம் கலவரமாக இருக்கிறதே எனும் கலக்கத்தில் காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கும் பாச்சா, தன் முயற்சியில் சற்றும் தளராதவனாய் ஆசிரியர் காலில் ஐந்தாவது தடவையாக விழுந்தான். “கொஞ்சம் பார்த்துச் செய்ங்க சார். ஆபத்தில்லாத அரசியல்வாதிகளா பாத்து பேட்டிக்கு அனுப்புங்க ப்ளீஸ். ஆயுசுக்கும் உசுரோட இருப்பேன்” என்று கோரிக்கை வைத்து கொஞ்சி கெஞ்சியெல்லாம் பார்த்துவிட்டான். ஆசிரியர் சற்று நேரம் ஸ்மார்ட்போனைப் பார்த்தபடியே இருந்தார். ”திமுககாரங்ககிட்ட வம்படியா நடந்துக்கிட்ட போலீஸ்காரரை டிரான்ஸ்ஃபர் பண்ணச் சொல்லிக் கட்சிக்காரங்க கேட்டப்ப, அண்ணா என்ன சொன்னார் தெரியுமா?” என்று வரலாற்றுத் தகவலுடன் வாய்திறந்தார்.
‘உதயநிதி நடிச்ச படங்களைக்கூட முழுசா பார்க்காத திராவிட மண்காரன்கிட்ட ஹிஸ்டரி எல்லாம் பேசி ஹிம்சை பண்றாரே’ என்று உள்ளுக்குள் எழுந்த எரிமலையை அடக்கி, வாய்நிறைய புன்னகையுடன், “என்னா சார் சொன்னார் அண்ணா?” என்றான் பாச்சா.
“ம்ம்ம்… திமுககாரங்களே இல்லாத ஊரு இருந்தா சொல்லுங்க. அங்க அனுப்பிடுவோம்னார்” என்று சொல்லிவிட்டு, பச்சாதாபமின்றி பாச்சாவைப் பார்த்தார் ஆசிரியர்.