வடவள்ளி
பூங்கா ஒன்றின் கொடியேற்று விழாவில் இருவர்...
``சார்... சட்டையில கொடிய தலைகீழா குத்துறீங்க... பச்சை கீழ வரணும். காவி மேல வரணும்!’’
``ஏன் பச்சை மேல இருந்தா ஆகாதா?’’
``அதில்ல சார்... அப்படிக் குத்துனா தலைகீழா குத்தினதாயிடும்..!’’
``நாடே தலைகீழாத்தான் போயிட்டிருக்கு. கொடிய தலைகீழா குத்தினா என்ன, நேரா குத்தினா என்ன?’’
``இருந்துட்டுப் போவட்டும் சார். கொடியையாவது நேரா குத்துவமே. நம்மளால முடிஞ்சது!’’
``சரி சரி என்னோட சட்டையில கொடிய சரி பார்க்கிறதெல்லாம் இருக்கட்டும்... மைதானத்துல ஏத்தப்போற கொடி நேரா இருக்கான்னு முதல்ல செக் பண்ணிக்குங்க..!’’
``ஆமாம்ல... நல்லவேளை ஞாபகப்படுத்தினீங்க!’’
(முதலாமவர் கொடிக்கம்பம் நோக்கி ஓடுகிறார்)
- கோவை, வி.ரோகிணி
நெய்வேலி
மெயின் பஜாரில் டீக்கடையில்...
``டீ எவ்வளவு அண்ணாச்சி!''
``பத்து ரூபாய்!''
``8 ரூபாய் டீ 10 ரூபாயா! ஒரு லிட்டர் பால் 6 ரூபாய் ஏத்தினா நீங்க ஒரு டீக்கு 2 ரூபாய் ஏத்துறீங்க! அப்போ, ஒரு லிட்டர் பால்ல மூணு டீதான் போடுறீங்களா?''
``ஏன் கேட்க மாட்டீங்க! டீத்தூள் கிலோ 140 ரூபாயில் இருந்து 190 ரூபாய் ஏத்தியது எல்லாம் பத்திரிகையில் போட மாட்டான். கேஸ் விலை ஏறியது உங்களுக்குத் தெரியாதாக்கும். தண்ணியே டிமாண்டா இருக்கு. டீ விலை ஏறியதுதான் கசக்குதாக்கும்..!''
``சரி சரி... அடுப்பை விட சூடா இருக்கீங்க போல! அதே சூட்டோட சூடா, அடுத்து விலை ஏத்துறதுக்குள்ள ஒரு டீ போடுங்க!''
- நெய்வேலி,கி.ரவிக்குமார்