முத்தத்தில் கரைந்த முகம்!

By காமதேனு

ஜெ.சரவணன்
saravanan.j@kamadenu.in

‘முத்தம் காமத்தில் சேர்ந்ததல்ல’ என்ற வரிகளை  ‘தங்கமீன்கள்’ படத்தில் கேட்டிருப்பீர்கள். ஏனெனில் ஒவ்வொரு முத்தமும் ஒருவிதம். அதன் அர்த்தத்தைக் கொடுப்பவர், பெறுபவர் இருவருக்குமிடையிலான உறவே தீர்மானிக்கிறது. ஆனால், பெரும்பாலும் முத்தம் காமத்தின் சாட்சியாகவே இருக்கிறது. 

ஓவியர் கஸ்தவ் கிளிம்ட் வரைந்த ‘The Kiss' என்ற ஓவியத்தை ஒருமுறை பார்த்தால் போதும். அது மனதைவிட்டு அகலவே அகலாது. அந்த அளவுக்கு மனம் மயக்கும் காந்த சக்தி அந்த ஓவியத்தில் ஒளிந்திருக்கிறது. ஆஸ்திரியாவைச் சேர்ந்த ஓவியரான கிளிம்ட் 1907-ல், இந்த ஓவியத்தை வரைந்தார்.

ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான காதலை, தாபத்தை, தன்னைக் கரைத்து கொள்ளும் தவிப்பை கிளிம்டின் ‘முத்தம்’ என்ற ஓவியம் வெளிப்படுத்துகிறது. ஓவியம் முழுக்க மஞ்சள் நிறம் பாவித்திருக்கிறது. கிளிம்டின் தந்தை நகை வியாபாரி என்பதால் இயல்பாகவே கிளிம்ட் மீது தங்கத்தின் மஞ்சள் நிறம் அதிக பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும்.  இவர் தனது ஓவியத்தில் பல இடங்களில் தங்க மற்றும் வெள்ளி இழைகளையும் பயன்படுத்தியிருப்பது ஓவியத்தை இன்னும் சிறப்பானதாக ஆக்கியிருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE