கடைசிக் காலம்
கரி புகை பெருகும்
விறகடுப்பில் மூன்று
தலைமுறைகளாக
வெந்துகொண்டிருக்கிறது
அலுமினிய குண்டா.
வாக்கப்பட்டு வந்த
அப்பத்தாவின் வயதும்
அலுமினிய குண்டாவின்
வயதும் ஏறத்தாழ ஒன்றுதான்.
நிறம்மாறி உருமாறி
அடுப்பில் அனலாகும்
அலுமினிய குண்டாவுக்கும்
அப்பத்தாவுக்கும்
இது கடைசிக் காலம்.
ஓட்டை ஒடிசலான
குண்டாவாவது
பேரீச்சம்பழமானது.
அப்பத்தாதான் பாவம்!
- எஸ்.தேவி கோகிலன்
தட்டாங்கல்லான கூழாங்கல்
ஆறோடும் மீனோடும் வாழ்ந்த
மண்மணக்கும் காலங்களின்
சுவாசம் இழந்த கூழாங்கல்
காலவோட்டத்தில்
தட்டாங்கல்லாகிப்போன சோகம்.
காய்ந்த பனைமரப் பொந்துகளில்
கூடுகளில் வாழ்ந்த குருவியின்
தகதகப்பு கைகளெங்கும்.
நெல்லடித்த மந்தைகளை
பறவைகள் தேடுகின்றன
தானியங்கள் பூத்த நிலங்களை
குரலால் கூப்பிடுகின்றன
உயரப் பறந்து.
கூழாங்கற்களின் கதையை
சுமந்தபடி திரிகிறது நதி
எப்போதோ பெய்யும் மழையில்!
- வீரசோழன் திருமாவளவன்
பறத்தல் பாடம்
வானின் செதில்களாய்
சிதறிப்போய்க்கொண்டிருக்கின்றன
விடியலைக் கண்டு
இரைதேடிப் புறப்பட்ட புல்லினங்கள்.
பறத்தல் இன்னும்
பறவையின் விரித்தலைப் போலான
ஒற்றை நிலையை எட்டவில்லை
என் குஞ்சுகளுக்காக
நேற்றைய சேகரித்தலின்
மிச்சத்தில்
இரைதேடி பறக்காத
புலர்பொழுதொன்றில்தான்
கண்டுகொண்டிருக்கிறேன்
தினம் பார்க்காத தினசரி பறத்தலை.
- ஸ்ரீகா
புன்னகை
உறையும் பெட்டகங்கள்
விரைந்தோடும் ரயிலின்
சன்னல் இருக்கையில் அமர்ந்து
வேடிக்கை பார்த்திடும்
குதூகலம் தருவது
தாத்தாக்களாலான உலகு.
தாத்தாக்களின் கைப்பிடியில்
எப்போதும்
கொஞ்சம் கூடுதல் அளவினதாகவே
கடத்தப்படுகிறது பாசம்.
கால இயந்திரத்தில் பயணித்து
குழந்தைகளாகவே மாறிவிடும்
தாத்தாக்கள் சொல்லும் கதைகள்
இரவுகளுக்கு இனிமையின்
வண்ணம் பூசிவிடுகின்றன.
காலக்குழிக்குள் அமிழ்ந்திருந்த
தாத்தாக்களின் பால்ய வார்த்தைகள்
முகம் காட்டி முறுவலித்து
முதுமையை அழகாக்கிவிடுவன.
தாத்தாக்களின் இறப்பிலெல்லாம்
அவர்களின் புன்னகை உறையும்
பெட்டகங்களாகிவிடுகின்றன
பிஞ்சுகளின் இதயங்கள்.
- பாப்பனப்பட்டு வ.முருகன்