மோடி காட்டுக்குப் போன ரகசியம்... தமிழிசையிடம் தகவல் பெற்ற பாச்சா!

By காமதேனு

ஜாசன்
jasonja993@gmail.com

நாள் 20. நேரம் அதிகாலை 6 மணி (பிக் பாஸ் பாணியில் பிதுக்கிய குரலில் வாசிக்கலாம். தப்பில்லை!) முந்தைய இரவு வரை அரசியல் செய்தி சேகரித்த களைப்பில் முரட்டுத் தூக்கத்தில் இருந்தான் பாச்சா. பறக்கும் பைக்கில் பறக்கும் பாச்சாவின் கனவில் இப்போதெல்லாம் ஆட்டோக்களாக வந்து வரிசைகட்டி நிற்பது அவனுக்குக் கிலியூட்டியிருந்தது. வந்திறங்கும் ஆட்களின் கைகளில் ஆயுதங்களைப் பார்த்து அவன் அலறுவதும், அலாரம் அடிப்பதும் கோரஸ் சங்கீதமாக ஒலித்தன. சட்டுபுட்டென்று காலைக்கடன்களை முடித்துவிட்டு சமூகக் கடனாற்ற பறந்து சென்றான்.

ஆசிரியர் அனுப்பியிருந்த பட்டியலின்படி முதலில் சந்திக்க வேண்டிய தலைவர் தமிழிசை சவுந்தரராஜன். அவரைச் சந்திப்பதே சவாலாக இருந்தது பாச்சாவுக்கு. தமிழிசை தஞ்சை மாவட்டத்தில் இருக்கிறார் என்று சென்றால், அவர் மதுரைக்குச் சென்றுவிடுவார். கட்டக்கடைசியாகக் கன்யாகுமரியில் அவரைப் பிடித்தான் பாச்சா. “என்னங்கக்கா மாவட்டம் மாவட்டமா பறந்துகிட்டே இருக்கீங்களே? கட்சியை வளர்க்க மிஸ்டு கால் போதாதா?” என்று கேலியை… சாரி, கேள்வியை வீசினான்.

பின்னணியில் இருப்பவர்கள் சீரியஸாக இருப்பது போன்ற முகபாவனையுடன் முறைத்துக்கொண்டிருக்க, தமிழிசை ஆரம்பித்தார். “மாவட்டத்துக்கு மாவட்டம் என்ன? மொத்த உலகத்துக்கும் சென்று மோடியின் புகழ்பாடுவதே என் கடமை. இந்தப் பயணம் மோடிக்கு ஓட்டுப் போடாத உள்ளங்களின் வாட்டத்தைப் போக்குவதற்காக…” என்று செந்தமிழிசையாகப் பேசியவர், பாச்சாவின் ரியாக்‌ஷனைப் பார்த்ததும், “ஏம்ம்ப்பா சிரிக்கிற… வேற ஏதாச்சும் கேள்வி இருந்தா கேளு?” என்று கொச்சைத் தமிழில் கோபப்பட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE