பாச்சாவைப் பரிதாபப்பட வைத்த ராகுல்!

By காமதேனு

ஜாசன்
jasonja993@gmail.com

‘எல்லா தலைவர்கள்கிட்டயும் எக்குதப்பா கேள்வி கேட்டு எஸ்கேப் ஆகிட்டு இருக்கோம். என்னைக்கு மாட்டப்போறோமோ... என்னாகுமோ ஏதாகுமோ?’ என்று  விடியும்வரை விட்டத்தைப் பார்த்து யோசித்துக்கொண்டே படுத்திருந்த பாச்சா, அந்தக் களைப்பிலேயே காலை பத்தரை மணி வரை தூங்கிவிட்டிருந்தான். அலைபேசியை ஆன் செய்து பார்த்தால், ஆயிரத்தெட்டு அசைன்மென்ட்டுகளை வாட்ஸ்-அப்பில் அள்ளி வீசியிருந்தார் வாத்தியார், ஸாரி… ஆசிரியர். விடுவாரா என்ன?

முதல் அசைன்மென்டே முதல்வரைச் சந்திப்பதுதான். அவசரத்துக்கு மொபைல் சார்ஜரிலேயே பறக்கும் பைக்குக்கு சார்ஜ் ஏற்றிவிட்டு, பசுமைவழிச் சாலைக்குப் பறந்தான். முதல்வர் இல்லம். வெள்ளை வேட்டியும் சட்டையுமாகப் பளீர் சிரிப்புடன் வரவேற்றார் பழனிசாமி. “வணக்கம் சார், வர வர பசுமைவழிச் சாலையில டிராஃபிக் ஜாஸ்தியாயிட்டு வருது. பறந்துவர்ற என்னாலேயே பயபுள்ளைக ஒருத்தனையும் ஓவர்டேக் பண்ண முடியல. ஏதாச்சும் வழி பண்ணுங்களேன்” கோரிக்கையுடன் கும்பிட்டான் பாச்சா. “இதென்ன பெரிய விஷயம். அதி அதி வேக வழிச் சாலைன்னு பேர் மாத்திட்டா அத்தனை டிராஃபிக்கும் க்ளியராகிட்டுப் போவுது…” என்று கள்ளமற்றச் சிரிப்புடன் கண்ணடித்தார் முதல்வர்.

உள்ளுக்குள் உறங்கிக்கொண்டிருந்த அலாரம் திடீரென்று முழிப்பு வந்து அடிக்கவே, “எல்லாம் சரி, சபாநாயகர் மேல நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர்றதா சொல்லிக் கடைசி நேரத்துல பல்டியடிச்சிட்டாரே ஸ்டாலின்?” என்றான் கடமையுணர்ச்சியுடன். “அதுவா, ஒரு நாளைக்கி ஒரு தடவைதான் வெளிநடப்பு பண்ணணும்னு சபாநாயகர் கண்டிஷனா சொல்லிட்டார்.  ‘அதெப்படிங்க நாள் பூரா சும்மா உட்காந்துட்டு இருக்கிறது, நாங்க நாலு போராட்டம், பொதுக்கூட்டம் நடத்த வேணாமா, ஆக, காலார நடக்க வேணாமா’ன்னு கொந்தளிச்சுப்போய் ஒரு தீர்மானத்துக்கு ஏற்பாடு பண்ணினார் ஸ்டாலின். அப்புறம் பேசிக்கீசி ‘கரெக்ட்’ பண்ணிட்டோம்” என்றபடி, காலை டிபனில் கைவைத்தார் முதல்வர். ‘சரி… முதல்வர் பிசியாகிட்டார்’ என்று பைக் ஏறிப் பறந்தான்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE