பாளை பஸ் ஸ்டாண்டில் இருவர்...
``எசக்கிமுத்துங்கிற என் பேரை மாடர்னா மாத்திடலாம்னு இருக்கேன்லே!''
``ஏம்லே இப்போ ஒனக்கு இந்த வேண்டாத வேல?''
``எட்டுவழிச்சாலைய அதிவேகச்சாலைன்னு பேரை மாத்தற மாநிலத்துல இருந்துகிட்டு இதக்கூட நாம செய்யலேன்னா எப்புடிலே?''
``காலையில இவ்வளோ தெளிவா பேசுற நீயி பொழுது சாய்ஞ்சா ஒன் பேரே தெரியாத அளவுக்கு சரக்கடிச்சு சாய்ஞ்சி கெடக்குறியே... அது எப்படி?''
``போச்சு. அந்தச் சனியனை காலங் காலையிலயே ஞாபகப்படுத்திட்டியா... இனி நான் உருப்பட்ட மாதிரிதான்.''
- தஞ்சாவூர், ராம்ஆதிநாராயணன்
பட்டீஸ்வரர் கோயில் வாசலில் பூக்கடைக் காரரும் சாமி கும்பிட வந்தவரும்...
‘‘சார் இங்க செருப்பை விட்டுட்டுப் போனேன் பார்த்தீங்களா?’’
‘‘புது செருப்பா... பழைய செருப்பா..?’’
‘‘அவ்வளவு பழசுமில்லை; அவ்வளவு புதுசுமில்லை!’’
‘‘பிஞ்ச செருப்பா; பிய்யாத செருப்பா..?’’
‘‘பிஞ்சதுன்னும் சொல்ல முடியாது; அவ்வளவு பிய்யாததும்னும் சொல்லிட முடியாது..!’’
‘‘வெலை கூடுதலானதா..?”
(மறுபடியும் ஏதோ கேட்பதற்காக பூக்கடைக்காரர் வாயெடுப்பதற்குள் முந்திக்
கொள்கிறார் செருப்பைத் தொலைத்தவர்)
‘‘அடுத்ததா, சிவப்புக்கலரா, கறுப்புக்கலரா, பேட்டாவா, பிளாட்பாரத்துல வாங்குனதா? இதத்தானே கேக்கப் போறீங்க...”
“அதில்லங்க... பழைய செருப்பு, பிஞ்ச செருப்புன்னா காலணி பாதுகாப்பகத்துக்காரங்க வழிச்சுட்டுப் போய் அவங்க எடத்துல வச்சிருப்பாங்க; போய் வாங்கிக்கலாம். புதுசு, காஸ்ட்லியான அய்ட்டம்னா பிச்சக்காரங்க எடுத்து வெச்சிருப்பாங்க. அதுக்காக டீட்டெய்லு கேட்டா இப்டி அலுத்துக்கிறீங்களே..!”
(செருப்பைத் தொலைத்தவர் காலணி காப்பகத்துக்கு ஓடுகிறார்)
- ஒண்டிப்புதூரான், கோவை
ரயிலடியில் இருவர்....
``சந்திரனுக்கே ராக்கெட் விட்டுருக்காங்க நம்ம ஆளுங்க! சூப்பர் இல்லே!''
``சூப்பர்தான்... ஆனா, தண்ணிக்கே வழியில்லாதப்ப... அதுக்கு வழி பண்றதை விட, நிலவை ஆராய்ச்சி பண்றதை ஒண்ணும் பெரிய விஷயமா எடுத்துக்க முடியலியே!''
``அடப்போங்கடா! எதிர்வாதம் பண்றதே பொழப்பாப் போச்சு! நிலவுல தண்ணி கிடைச்சா வேணாம்னு சொல்வியா?''
``ம்க்கும்! கூரையேறி கோழி பிடிக்கத் தெரியாதவன் வானத்தை கிழிச்சு வைகுண்டத்தை காட்டுவானாம்!''
- தஞ்சாவூர், தே.ராஜாசிங்ஜெயக்குமார்
மணிமேடை ஜங்ஷனில் இருவர்...
``மாப்ளே... அத்திவரதரைப் பார்க்கப் போகலாம். வர்றியா?''
``நீயே போயிட்டு வா... நான் பக்கத்து தெருவில் இருக்குற சித்தி விநாயகரை கும்பிட்டுக்கிறேன்...''
``காசு செலவாயிடும்னு சொல்லிப் பார்க்காதே... இனி நாற்பது வருஷம் கழிச்சுத்தான் அத்தி வரதரைப் பார்க்க முடியுமாம்... அதுக்குள்ள நாம மண்டையப் போட்டுருவோம்...''
``மண்டைய போடுறதுல உன் கூட என்னை கூட்டு சேர்க்காத... முதல்ல ஊர்ல இருக்குற உன் அப்பன் ஆத்தாளைப் போய் பாரு...''
- பனங்கொட்டான் விளை, மகேஷ் அப்பாசுவாமி