ஜெ.சரவணன்
saravanan.j@kamadenu.in
குழந்தைப் பருவ நிகழ்வுகள் சில பசுமையான நினைவு களாக நம் இதயங்களில் பதிந்துபோகும். அதிலும் கிராமத்தில் தங்களின் குழந்தை மற்றும் வளரிளம் பருவத்தைக் கழித்தவர்களுக்குப் பல நிகழ்வுகள் காலங்கள் கடந்து பசுமையாகப் பதிந்திருக்கும். மண்ணோடும் இயற்கையோடும் ஒன்றிணைந்த வாழ்க்கையையே பெரும்பாலும் மனிதன் இறுதிவரை சுமக்கிறான். புகழ்பெற்ற ஓவியர் மார்க் சகால் ‘I and the Village’ என்ற ஒவியத்தின் மூலம் அதை நிரூபித்துள்ளார்.
அவருடைய பசுமையான நினைவுகளில் தன்னுடைய கிராமம், தனக்குப் பிடித்தமான ஆடு ஆகியவற்றைக் கொண்டு இந்த ஓவியத்தை வரைந்திருக்கிறார். பெரும்பாலும் ஆடு குறியீடாகவே பாவிக்கப்படுகிறது. ஒன்று பலியாகப்போவதன் குறியீடாகவோ, அல்லது களங்கமற்ற நிலையின் குறியீடாகவோ பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், சகாலின் ஓவியத்தில் தொலைந்துபோன அவருடைய குழந்தைப்பருவ கிராம வாழ்க்கை நினைவுகளை மீட்டெடுக்கும் குறியீடாகவே ஆடு இருக்கிறது.
ஓவியத்தின் ஒரு மூலையில் ஆட்டின் தலை மறு மூலையில் ஓவியரின் தலை. அவற்றுக்குள் முக்கோணம் சதுரம், வட்டம், கூம்பு என வடிவங்களையும் பல்வேறு வண்ணக் கலவைகளையும் பயன்படுத்தி ஒரு மாய யதார்த்த உணர்வைக் கொடுக்கும் ஓவியத்தைப் படைத்திருக்கிறார். அதில் தனது குழந்தைப்பருவ நினைவுகளை வரைந்திருக்கிறார்.