நியூயார்க்கில் உறங்கும் நிலா!

By காமதேனு

ஜெ.சரவணன்
saravanan.j@kamadenu.in

பெண்கள் இல்லாமல் கலை இல்லையென்பது எந்த அளவுக்கு உண்மையோ, அதே அளவு கலை உலகில் பெண்களுக்கான இடம் என்பது மிக மிகக் குறைவு என்பதும் உண்மை. பல கலைஞர்களுக்குப் பெண்கள் உத்வேகம். பல காவியங்கள் பெண்களை மையமாக வைத்து உருவாகியிருக்கின்றன. பெரும்பாலான ஓவியங்களில் பெண்கள் மாடல்களாக இருக்கிறார்கள். ஆனால், உலகப் புகழ்பெற்ற பெண் கலைஞர்கள் வெகு சிலரே. அவர்களில் ஒருவர்தான் ஜோர்ஜியா ஓக்கிஃபீ.

வட அமெரிக்கப் பெண் ஓவியரான இவரது ஓவியங்களில் உலகப் பிரபலம் அடைந்த ஓவியம் ‘New York Street with Moon’. இந்த ஓவியம் குறித்து ஜோர்ஜியா குறிப்பிடும்போது, ‘‘நியூயார்க்கை ஒருவர் அது இருப்பதுபோலவே வரைந்துவிட முடியாது. ஆனால், நியூயார்க் ஒருவருக்கு எத்தகைய உணர்வைத் தருகிறது என்பதிலிருந்து ஓவியத்தை வரையலாம்” என்கிறார்.

ஜோர்ஜியாவுக்கு வானுயர்ந்த கட்டிடங்கள் மீது மிகுந்த ஆர்வம் உண்டு. ஜன்னலோரத்தில் படுக்கை விரித்து படுத்தபடி நியூயார்க்கின் வானுயர்ந்த கட்டிடங்களையும் அதன் மீது உறங்கிக்கிடக்கும் நிலவையும் இரவெல்லாம் பார்த்து ரசிக்கும் பழக்கம் கொண்டவர். அதேசமயம் பார்க்கும் எதுவொன்றையும் ஏதோ ஒன்றோடு தொடர்புப்படுத்தி பார்ப்பதுதான் கலைஞர்களின் வழக்கம்.
ஜோர்ஜியா தான் ரசிக்கும் காட்சியோடு தனது மனதையும் ஒருங்கிணைத்து ஓவியங்களை உருவாக்கினார். அவர் வரைந்த ‘New York Street with Moon’ ஓவியத்தில் அவர் ரசித்த கட்டிடமும், நிலாவும் மட்டுமில்லை... கூடவே நியூயார்க் குறித்து தன்னுடைய பார்வையையும் பதிவு செய்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE