என்.சுவாமிநாதன்
தினசரி, வார இதழ்களில் சிறுகதைகளும், புதினங்களுமாக எழுதிக்குவிப்பவர் தாமரை செந்தூர் பாண்டி. எவ்வித முன் அனுபவமும் இன்றி நேரடியாக திரைப்படமும் இயக்கினார். உடல் உபாதைகளால் கொஞ்சகாலம் பேசப்படாமல் இருந்தவர் இப்போது மீண்டும் திரைக்களத்துக்கு வந்திருக்கிறார்.
தாமரை செந்தூர்பாண்டியின் எழுத்துக்கு பெரும் ரசிகர் பட்டாளமே உண்டு. ஆயிரத்துக்கும் அதிகமான சிறுகதைகளும், ஐம்பதுக்கும் அதிகமான நாவல்களும் இவரது எழுத்தில் பிரசவித்திருக்கின்றன. இதுபோக குடும்ப நாவல்கள், சிறுகதைத் தொகுப்பு, வரலாற்றைப் பின்னணியாகக் கொண்ட புதினங்கள் என 26 புத்தகங்களையும் எழுதியுள்ள செந்தூர்பாண்டி, ஓய்வு பெற்ற ஆசிரியர். தனது மனைவியின் பெயரான தாமரையையும் தனது பெயருக்கு முன்னாள் சேர்த்துக்கொண்டு மனைவிக்கு மரியாதை செய்திருக்கிறார்.
கோடை தணிந்த ஜுலை மாதத்தின் ஒரு காலைப் பொழுதில் தாமரை செந்தூர்பாண்டியை அவரது இல்லத்தில் சந்தித்தேன். “எனக்கு எழுத்துதான் ஜீவன். 1965-ம், வருசம் நான் எஸ்எஸ்எல்சி படிச்சுட்டு இருந்தேன். அப்போ நான் எழுதுன ‘திருமண பரிசு’ கதை மதுரை மாலைமுரசில் பரிசுக்கான கதையா தேர்வாச்சு. அதற்கு அப்புறம் பல்வேறு முன்னணி வார இதழ்கள்லயும் என்னோட கதைகள் வரத்துவங்குச்சு. பரிசுகளும் குவியத் தொடங்குச்சு.