பறக்கும் பைக்கில் பாச்சா!

By காமதேனு

ஜாசன்

“அங்கே போ... இங்கே போன்னு நல்லா வேலை மட்டும் வாங்குறீங்க. ஆனா ஒரு டூவீலர் கேட்டு மாசக் கணக்காச்சு. கண்டுக்கவே மாட்டுறீங்க. அந்த அத்திகிரி வரதர்தான் உங்க மனசுல புகுந்து கருணை காட்டணும்” என்று நேற்று ஆசிரியரிடம் அரசியல் நிருபர் பாச்சா கோபமாகப் பேசியது அத்திகிரி வரதர் காதிலும் விழுந்திருக்க வேண்டும். உடனே கருணை காட்டிவிட்டார். ஆன்லைனில் அலசிப் பார்த்த ஆசிரியர் பறக்கும் பைக் எனப்படும் ட்ரோன் பைக்கை ஆர்டர் செய்ய, மறுநாளே அதுவாகப் பறந்துவந்து அதுவாக டெலிவரி ஆகிவிட்டது.

பாச்சா வந்ததும், “வா உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு” என்று பார்க்கிங் ஏரியாவிற்கு அழைத்துச் சென்றார் ஆசிரியர். “நீ பைக்தானே கேட்ட? இது ட்ரோன் பைக். நின்ன இடத்துலேருந்து சல்லுன்னு பறந்து எங்க வேணாலும் போகலாம். இந்தா பிடி சாவியை” என்று உலோகச் சாவியை பாச்சாவின் கையில் திணித்தார் பாஸ், ஸாரி… ஆசிரியர். ‘அய்யய்யோ இனி செவ்வாய் கிரகத்துக்கெல்லாம் போகச் சொல்லிக் கழுத்தறுப்பாரே’ என்று கடன்பட்ட வேந்தன் போல் கலங்கினாலும், ‘இதைவிட்டா வேற வழி?’ என்று இறங்கிவந்தான் பாச்சா. நல்லவேளை செவ்வாய் கிரகத்துக்கெல்லாம் போகச் சொல்லவில்லை ஆசிரியர். அதிகாரச் சண்டையில் மூழ்கியிருக்கும் அண்டை மாநிலமாம் கர்நாடக விஜயம் தான் முதல் அசைன்மென்ட்.

ஆனா ஊனா அழுதுவைக்கும் நடிகர் சேரன் போல் முகத்தை வைத்துக்கொண்டு டிவி சேனல்களை மாற்றிக்கொண்டே பார்த்துக்கொண்டிருந்தார் நித்தியகண்ட முதல்வர் குமாரசாமி. “சுத்த கர்நாடகமா இருக்கீங்களே சார்! பாஜக கொடைச்சல் குடுக்கும்னு தெரியாம அமெரிக்காவுக்கு என்னாத்துக்கு டூர் போனீங்க?” என்று ஆரம்பித்தான் பாச்சா. “அட தெரியாம போய்ட்டேன்ப்பா. இங்கே எங்க கட்சி எம்எல்ஏ-க்களை இப்படி வாரிச் சுருட்டிக்குவாங்கன்னு கனவா கண்டேன்?” என்று கண்ணைக் கசக்கிய குமாரசாமியிடம், “ரிசைன் பண்ணுங்க ரிசைன் பண்ணுங்கன்னு எடியூரப்பா இடையூறு பண்ணிட்டு இருக்காரே? அவர் முகத்துக்காச்சும் ரிசைன் பண்ணிடலாமே?” என்று பாச்சா பந்தைப் போட, திடீரென்று ஆவேச அந்நியனாகி, “அதெல்லாம் நான் ரிசைன் பண்ண மாட்டேன். என்னாத்துக்கு நான் ரிசைன் பண்ணணும். என் சேர்... என் உரிமை” என்று எகிற, அங்கிருந்து சிட்டாகப் பறந்தான் பாச்சா.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE