ரிஷபன்
எங்க உறவுல எப்ப விரிசல் விழுந்துச்சுன்னு ஞாபகம் இல்லை. ஆனா, அந்த விரிசல்ல ஒரு சாப்பாட்டுத் துணுக்கு மாட்டிக்கிட்டு அவஸ்தை கொடுத்துச்சு பாருங்க... அப்பதான் எனக்கே புரிஞ்சுது. அட,என் பல்லைச் சொல்றேங்க!
கடவாய்ப் பல்லுல லைட்டா ஒரு ஏர்லைன் க்ராக்... ஏதோ உறுத்துதேன்னு நாக்கால துழாவிக்கிட்டே ஹாலுக்குப் போனேனா... “என்ன பண்றிங்க..?”ன்னு மிரண்டு போய் ரெண்டு பேரும் என்னை உத்துப்பார்த்தாங்க. மனைவி கம் மகனார்.
“பல்லுல ஏதோ பிரச்சினை போல. சாப்ட்டது மாட்டிக்கிச்சு எடுக்க வரல... ஹேர் பின் இருந்தா குடுவே”ன்னு கேட்டேன். “அப்பா... கண்டதை வச்சு நோண்டக் கூடாது. டாக்டர்ட்ட போயிருங்க”ன்னு யதார்த்தமாத்தான் அவன் சொன்னான். இவங்க உடனே லபக்குன்னு பிடிச்சுக்கிட்டாங்க. “ஆரம்பத்துலேயே போவ மாட்டாரு.. நல்லா வளர்த்துக்கிட்டு சீரியசானாத்தான் போவாரு”ன்னு குற்றப் பத்திரிகை வாசிச்சாங்க.