சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் உதகை மலர் கண்காட்சியில் கூடுதல் அலங்காரங்கள்

By KU BUREAU

உதகை: நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 126-வது மலர் கண்காட்சி, கடந்த 10-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. சிறப்பம்சமாக 35 அடி உயரம் 44 அடி அகலத்தில் டிஸ்னி கேசில் மற்றும் டிஸ்னி கதாபாத்திரங்களான மிக்கி மவுஸ், மின்னி மவுஸ், கூஃபி, புளூட்டோ, டொனால்ட்டக் ஆகியவை ஒரு லட்சத்து 20 ஆயிரம் கார்னேசன், கிரைசாந்திமம், ரோஜா மலர்களைக் கொண்டு வடிவமைக்கப் பட்டுள்ளன.

இதேபோல, நீலகிரி மாவட்டத்தின் அடையாளமாக கருதப்படும் யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற நீலகிரி மலை ரயில், குகையில் இருந்து வெளியில் வருவதுபோல, 35 அடி நீளத்தில் 22 அடி அகலத்தில் 80 ஆயிரம் கார்னேசன், கிரைசாந்திமம், மலர்களை கொண்டு தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பதற்காக மலர் அலங்கார மேடைகளில் 72 இனங்களில் 388 வகையான 35 ஆயிரம் மலர் தொட்டிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், கண் காட்சிக்கான நுழைவுக் கட்டணம் உயர்வு, இ-பாஸ் நடைமுறையால் மலர் கண்காட்சியை காண வரும் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ளது. இதனால், நுழைவுக் கட்டணம் ரூ.125-ஆக குறைக்கப்பட்டது. இந்நிலையில், சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தற்போது கூடுதல் மலர் அலங்காரங் களை தோட்டக்கலை துறை காட்சிப்படுத்தியுள்ளது. அதன்படி, பல வண்ண கார்னேசன் மலர்களால் கிடார், காளான் அலங்காரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இதில், காளான் மலர் அலங்கா ரம் சிவப்பு மற்றும் வெள்ளை மலர்களால் உருவாக்கப்பட்டு, குழந்தைகள் மற்றும் பெரியவர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும், மலர் அலங்காரங்களில் மழையால் சேதமடைந்த மலர்களை அகற்றிவிட்டு, புதிய மலர்களை வைத்து மலர் அலங்காரங்களுக்கு புதுப்பொலிவை ஏற்படுத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE