ஒற்றைச் சொல் பிடித்து...
அந்த ஒற்றை நிலவின் பின்னணியில்
ஒரு நூறு கதைகள் ஒளிந்திருக்கின்றன.
தாழிடப்படாத
கொல்லைப்புறக் கதவு வழியே
நீட்டி முழக்கும் ஒலியலைகளை
உள் நுழைத்துக்கொண்டிருக்கின்றன
இரவுப்பாடகர்களான பல ஜீவராசிகள்.
மனம் அள்ளும் மணத்தைக் காற்றில் பரப்பி
கவனம் ஈர்க்கின்றன தூரத்து மலர் கூட்டம்.
ஆடும் கிளைகளில் இருந்து
உதிரும் இலைகளோ
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்கின்றன.
இனம் புரியாத அழுத்தத்தில்
இருளப்பிக் கிடப்பதாய்
அப்படியொன்றும் அந்த அடர்வனத்தை
புறந்தள்ளிவிட முடியாது.
ஒற்றைச் சொல் பிடித்து
ஓடிவரும் கவிதையைப் போல
காணும் யாவுமே
தன்னுள் கடத்தவே செய்கின்றன
கணநேரமேனும் நம்மை!
- மயிலாடுதுறை இளையபாரதி
வெயில் காலம் போகட்டும்
பாடிப் பறந்த பறவைகள் பாதை மாறின
ஒற்றையடிப் பாதையின் கால்கள்
தயங்கி நகர்ந்தன.
காற்றில் பறக்கும் ராகத்துளிகள்
சொல்லெடுத்துக் கொடுக்கின்றன
வெந்துபோகும் நெஞ்சத்துக்கு.
மானுட பிசுபிசுப்பு ஒட்டியே இருக்கிறது
இப்போதும் கிராமத்துப் பேருந்தில்.
கிராமத்து முற்றத்தில்
வரவேற்கிறது பிள்ளையார் பூசணி.
வெயில் காலம் போனால்
நினைவுபடுத்தலாம்
வயற்வெளியில் விளைந்த நெல்லை!
- வீரசோழன் க.சோ.திருமாவளவன்