சம்மரை சமாளிக்கலாம்  வாங்க... இது பெண்கள் ஸ்பெஷல்

By காமதேனு

உ.சந்தானலெட்சுமி
santhanalakshmi.u@thehindutamil.co.in

``போன வாட்டியவிட இந்த வாட்டி வெயில் அதிகம்ல...'' என்ற வேனல் குரல்கள் திரும்பிய பக்கமெல்லாம் கேட்கிறது. போதாக்குறைக்கு, “கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு வெப்பம் ஒரு டிகிரி செல்சியஸ் அதிமாக இருக்கும்” என்று வானிலை ஆராய்ச்சி மையமும் அபாய மணி அடிக்கிறது.
பங்குனி வெயிலே நம்மை பதம் பார்த்துவிட்டது என்றால், இதோ சித்திரையும் பிறந்துவிட்டது. அக்னி பகவான் அடுத்த ஒரு மாதத்துக்கு நம்மை ஒட்டுமொத்தமாகக் குத்தகை எடுத்து தாக்க ஆரம்பித்துவிடுவார். ஒவ்வொரு ஆண்டும் கோடையை நாம் எப்படிச் சமாளித்தோமே அப்படியே இந்த ஆண்டும் சமாளித்துத்தான் ஆகவேண்டும். அதேசமயம், நாம் உடல்நலப்பேணலையும் கவனத்தில் கொள்ளவேண்டும். குறிப்பாக, வீட்டில் உள்ள அனைவரையும் கண்ணும் கருத்துமாய் கவனித்துக்கொள்ளும் பெண்கள் தங்களின் உடல்நலத்தை சரியாக கவனித்துக்கொள்ள வேண்டும்.



“நாளும் கிழமையும் நலிந்தோர்க்கில்லை, ஞாயிற்றுக்கிழமையும் பெண்களுக்கில்லை” என்பார்கள். ஆம், பெண்களுக்கு விடுமுறை என்பதே கிடையாது என்பதுதான் என்றைக்குமே எழுதப்படாத விதி. ஆனால், எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டுக்கொண்டு செய்து தன்னைச் சார்ந்தவர்களைக் கவனித்துக்கொள்ளும் பெண்கள், தங்கள் உடல்நலத்தை அவ்வளவாய் பேணுவதில்லை.

குறிப்பாக மாதவிடாய் தருணங்களில் பெண்களின் உடல் வெப்பநிலையில் மாறுபாடு இருக்கும். அத்தகைய நேரங்களில் பெண்கள் உடல் மற்றும் மனதளவில் சோர்வாக இருப்பார்கள். கோடைகாலத்தில் இந்தச் சோர்வானது பெண்களுக்கு அதிகமாகவே இருக்கும். அதிலும், இன்றைய சூழலில் பெண்கள் வீட்டையும் கவனித்துக்கொண்டு வேலைக்கும் செல்கிறார்கள். வேலைக்குச் செல்லும் பெண்களாக இருந்தாலும் வீட்டில் இருக்கும் பெண்களாக இருந்தாலும் தங்களின் உடல் ஆரோக்கியத்தைக் கவனித்துக்கொள்வது அதி முக்கியம்.

மனித உடலுக்குச் சரியான ஆதாரமே, ஆகாரம்தான். சரிவிகித உணவே நம்மைச் சரிந்துவிழாமல் காக்கும். ஆதலால், இந்தக் கோடையில் பெண்கள் எந்தெந்த ஊட்டச்சத்துமிக்க உணவுகளை எடுத்துக்கொள்ளலாம் என்பது குறித்தும் ஒரு தெளிவான புரிதல் இருக்க வேண்டும். இதுகுறித்து ஊட்டச்சத்து நிபுணரும் ‘வூட்டு’ நிறுவனத்தின் நிறுவனருமான ப்ரீத்தி, காமதேனு வாசகிகளுக்காகப் பேசுகிறார்.

``சம்மரில் லோ பீபி பிரச்சினை, மயக்கம் உள்ளிட்டவை அதிகமாக இருக்கும். அதற்குக் காரணம், வெயில் காலத்தில் நமது உடம்பில், சோடியமும் பொட்டாசியமும் வேர்வையாக வெளியில் போய்விடும். ஏசிக்குள்ளேயே இருப்பவர்களுக்கு உடம்பில் நீர்ச்சத்து குறைந்துவிடும். அதுமட்டுமின்றி தாகமும் எடுக்காது. இதனால் பசி, தாகம் இரண்டுக்கும் வித்தியாசம் தெரியாமல் போய்விடும். அதனால் மயக்கம் வரும். இதைச் சரிசெய்ய சரியான நேரத்துக்கு சாப்பிட்டு, போதிய இடைவெளியில் தண்ணீர் பருகவேண்டும். ஒருநாளைக்குக் குறைந்தது மூன்று லிட்டர் தண்ணீர் நமக்கு அவசியம். அதைத் தண்ணீராகத்தான் அருந்த வேண்டும் என்பதில்லை. மோர், இளநீர், நுங்கு, எலுமிச்சை சாறு, தர்பூசணி, பானகம் போன்றவையாகவும் பருகலாம். இவற்றை பகலிலும், மாலையில் சூப்பும் குடிக்கலாம். இதன்மூலம் உடம்பில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ளலாம்.

கோடையில் அதிகமாகத் தொற்று நோய்கள் பரவும். குறிப்பாக இருமல், தொண்டை அலர்ஜி, சளி போன்ற நோய்கள் வரும். ஐஸ்கீரீம், மில்க் ஷேக், சர்க்கரை போட்ட ஜூஸ் போன்றவற்றைக் குடிப்பதைத் தவிர்த்தால் இந்தப் பிரச்சினைகள் வராமல் தடுக்கலாம். ஃப்ரிட்ஜில் தண்ணீர் வைத்து அருந்துவதும் வேண்டாம். முடிந்தவரை நீர்க்காய்களான சுரைக்காய், பூசணிக்காய், புடலங்காய், பீர்க்கங்காய் போன்ற காய்களை தின
மும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இவற்றைப் பொரியலாக சாப்பிடாமல் கூட்டு செய்து சாப்பிடுவது நல்லது.

வேலைக்கும் செல்லும் பெண்கள், வீட்டில் இருப்பவர்களை ஃபாலோ செய்ய முடியவில்லையே என்று அங்கலாய்க்காமல், அவர்களும் கோடையில் தங்கள் நலனில் அக்கறை செலுத்த வேண்டும். ஒரு பாட்டிலில் ஒரு கையளவு மாதுளை முத்துக்களைப் போட்டு அதில் தண்ணீரை ஊற்றி வைக்கவும். அலுவலகத்தில் இருக்கும்போது இந்த நீரை பருகலாம். ஒருநாளைக்கு ஒரு பழம் என்று தினமும் இதை ஃபாலோ செய்யலாம்.
ஒரு டப்பாவில் நட்ஸ் போட்டு எடுத்துச் செல்லலாம். இதை மதிய உணவுக்கு முன்போ அல்லது பிறகோ சரியான இடைவெளிவிட்டு சாப்பிட
லாம். பிரேக்கில், ஃப்ரூட்ஸ் சாலட் அல்லது சர்க்கரை சேர்க்காத ஜூஸ் குடிக்கலாம். எலுமிச்சையின் தோலை கட் செய்து வாட்டர் பாட்டிலில் போட்டு வைத்து அந்தத் தண்ணீரை அவ்வப்போது பருகலாம். இதற்கு உடம்பிலுள்ள நச்சுத்தன்மையை அகற்றும் தன்மை உள்ளது.

சாதாரணமாகவே மாதவிடாய் சமயங்களில் பெண்களிடம் பதற்றமும் மன அழுத்தமும் நிறைந்திருக்கும். வேனிற் காலத்தில் இந்த அழுத்தம் இன்னும் அதிகமாகவே இருக்கும். இந்த தருணங்களில் ஏலக்காயைப் பொடித்து தண்ணீரில் போட்டு வைத்துக்கொண்டு அந்தத் தண்ணீரைப் பருகலாம். ஏலக்காயில் உள்ள நறுமணமும் மருத்துவகுணமும் டிப்ரஷனைத் தடுக்கக்கூடியது.

மாதவிடாய் சமயத்தில் வரக்கூடிய டிப்ரஷனுக்கு நமது உணவும் ஒரு காரணமாக இருக்கும். எனவே, பெண்கள் சரியான டயட்டை ஃபாலோ செய்ய வேண்டும். கொண்டைக்கடலை, ராஜ்மா, துவரம் பருப்பு போன்றவற்றை சம்மரில் முடிந்தவரை தவிர்த்தல் நலம். அதற்குப் பதிலாக, முளைகட்டிய பயிறு, பயத்தம் பருப்பு கூட்டு, கேழ்வரகு மற்றும் கம்பில் செய்த அடை, கூழ் ஆகியவற்றைச் சாப்பிடலாம். சிறுதானியங்களை தினம் ஒருவேளைக்கு உணவாக எடுத்துக் கொள்ளலாம். கொத்தமல்லி, புதினா சட்னி சாப்பிடலாம். இவை எல்லாமே மன அழுத்தத்தைக் குறைப்பதோடு, உடலை குளிர்ச்சியாகவும் ஹெல்தியாகவும் வைக்கும்.

வேலைக்குச் செல்லும் பெண்கள் ஒரு சிறிய டப்பாவில் சூரியகாந்தி, பூசணிக்காய் விதைகளைப் போட்டு வைத்துக்கொண்டு அவ்வப்போது சாப்பிடலாம். இதுவும் மாதவிடாய் சமயத்தில் வரக்கூடிய மன அழுத்தத்தை கன்ட்ரோல் செய்யக்கூடியது. கூடுமானவரை கோடையில் அசைவம் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். தவிர்க்க முடியாதவர்கள் மீன் மட்டும் சாப்பிடலாம்.

இயல்பாகவே பெண்கள் யூரினரி இன்ஃபெக்‌ஷனில் அவதிப்படுவார்கள். சம்மரில் இது அடிக்கடி ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அதனால், நிறைய தண்ணீர் குடிப்பது மட்டுமில்லாது, சிறுநீரை அடக்காமல் உடனே போய்விட வேண்டும். யூரினரி இன்ஃபெக்‌ஷனை ஏற்படுத்தும் கிருமியை அழிக்கும் சக்தி நம்ம ஊர் நாவல்பழத்துக்கு உண்டு. அதனால், ஒரு நாளைக்கு பத்துப்பழம் என்ற கணக்கில் தினமும் நாவல் பழத்தைச் சாப்பிடுதல் இந்த சம்மருக்கு நலம்.

சீசனல் பழங்கள் என்று சொல்லக்கூடிய இந்தக் கோடையில் கிடைக்கும் மாம்பழம், பலாப்பழம், தர்பூசணி, கமலா ஆரஞ்ச், முலாம்பழம் போன்ற பழங்களை எடுத்துக்கொள்ளலாம். குறிப்பாக வைட்டமின் ‘ஏ’ சத்து நிறைந்த மாம்பழத்தை இந்த சம்மரில் ஒரு நாளைக்கு ஒரு பழம் என்ற கணக்கில் எடுத்துக்கொள்ளலாம். சர்க்கரை நோய் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்று அவர் சொல்லும் அளவுப்படி இந்தப் பழங்களை எடுத்துக்கொள்வது நல்லது.

சாதத்தில் தண்ணீர் ஊற்றி முதல் நாள் இரவு ஊறவைத்து காலையில் சாப்பிடலாம். பால், காபி, டீ அருந்துவதை முடிந்தவரைத் தவிர்க்கவும். அதற்கு பதிலாக க்ரீன் டீ, பாதாம்பால், பிளாக் காபி ஆகியவற்றை அளவோடு அருந்தலாம். இதையெல்லாம் ஒழுங்காகக் கடைப்பிடித்தாலே இந்த வேனல் காலத்தை பெண்கள் வேதனையின்றி கடப்பதுடன் எனர்ஜெட்டிக்காகவும் இருக்கலாம்” என்கிறார் ப்ரீத்தி.

ஆகவே பெண்களே... வழக்கம்போல் அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் என்று இதையும் ஒத்திப் போடாமல் உங்கள் உடல் நலனிலும் உடனடி அக்கறை செலுத்துங்கள். வேனலை விரட்டி எப்போதும் உங்களை உற்சாகமாய் வைத்திருங்கள்! 

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE