ரிஷபன்
வாடகை வீட்ல குடியிருந்த நேரம். குறிப்பிட்ட இடைவெளியில வான்ட்டடாய் வந்து குதிக்கும் ஓனர் என்னைப் பார்த்து மூக்கால அழுதுட்டுப் போவார். "எல்லாச் செலவும் ஏறுது... கட்டுப்படியே ஆவல" என்று. அடுத்த மாசம் வாடகை அதுவாவே ஏறிடும். “உங்கள மாதிரி இளிச்சவாயனை நான் பார்த்ததே இல்ல” என்று சகதர்மிணி இடித்துக் காட்டுவாள். ஒரு நாள் என் நண்பர் வீட்டுக்கு வந்தார். “எவ்ளோ நாளைக்குத்தான் இப்டி சிரமப்படுவ... கடன வாங்கி வீடு வாங்கிரு. காலி பண்ண வேண்டிய அவசியமே இல்ல. ஓனர் பயமும் இல்ல” என்று ஆசைவார்த்தை காட்டி அவரே ஒரு இடத்துக்குக் கூட்டியும் போனார்.
அது பட்டப்பகல் நேரம். தெருவே வெறிச்சோடிக் கெடந்துச்சு. “பார்த்தியா... ஆளே இல்ல. சுத்தமா இருக்கு” என்று ஏற்றி விட்டார். ரெண்டாவது மாடியில ஃப்ளாட். பன்மாடிக் குடியிருப்பு. தெருவைப் பார்த்த வாசல். “நல்லா இருக்குங்க” என்றாள் மனைவி. “இங்கே ஃப்ரிட்ஜ் வைக்கலாம்... இங்கே வாஷிங் மெஷின்... இந்த ஹால் மூலையில என்ன வைக்கலாம்?” என்று, இன்னும் வாங்காத வீட்டுக்கு அப்போதே அவள் இடம் பிடிக்க ஆரம்பிச்சுட்டா.
அப்புறமென்ன... பேங்க்ல லோன் போட்டு குடி போயாச்சு. விடிகாலை. நல்ல தூக்கத்துல ‘ஹம்மா... ஹம்மா’னு யாரோ கூப்பிடுற மாதிரி குரல். நல்லா காத்து வரும்கிறதால பால்கனிப் பக்கத்து ரூம்லதான் எல்லாரும் படுத்துருந்தோம். கதவைத் திறந்துக்கிட்டு பால்கனிக்கு வந்து எட்டிப் பார்த்தேன். நேர் எதிர் வீட்டு வாசல்ல வாட்டசாட்டமா ஒரு எருமை மாடு! மணி நாலு. மாட்டுக்காரர் பாலைக் கறந்துட்டு மாட்ட விட்டுட்டுப் போயிட்டார். அந்த மாடுதான் என்னோட தூக்கத்த துவம்சம் பண்ணிருக்கு. என் தூக்கத்துக்கு வேட்டு வெச்சுட்டு அழகா நடந்து வந்து எங்க அபார்ட்மென்ட் வாசல்ல சொகமா படுத்துருச்சு. சிமென்டு தரை நல்லா இதமா இருந்திருக்கும் போல... அஞ்சு நிமிஷத்துக்கு ஒரு வாட்டி ‘ஹம்மா...’ கச்சேரி நடத்துச்சு. விடியுற வரைக்கும் கச்சேரி ஓயல!