ஜெ.சரவணன்
“பிரபஞ்சத்தில் கால நேரம் என்று ஒன்று இல்லை. ஆனால், கடிகாரங்கள் உண்டு” என்று அறிஞர்கள் சொல்வார்கள். இருளையும் பகலையும் வைத்து ஒரு கால நேரத்தை மனிதன் வகுத்து கடிகாரத்தை உருவாக்கினான். ஆனால், காலம் என்பது நிலையற்றது. அது அவரவர் மனநிலையைப் பொறுத்து மாறக்கூடியது. அதுவும் இன்றைய நவீன யுகத்தில் இரவும் பகலும் என்பதே அர்த்தமில்லாததாக மாறிவிட்டது. ஒருவருக்காக அல்லது ஒன்றை எதிர்பார்த்துக் காத்திருக்கும்போது காலம் என்பது வழக்கத்தைவிட நீளமாகிறது. அதுவே ஒன்றில் லயித்துப்போய் மகிழ்ச்சியாக இருக்கும்போது, நீண்ட நெடுங்காலம்கூட குறுகி விடுகிறது.
இந்த மாய யதார்த்தத்தை உணர்த்தும் விதமாக ஸ்பெயினைச் சேர்ந்த ஓவியர் சால்வடோர் டாலி என்பவர் வரைந்த புகழ்பெற்ற ஓவியம்தான்’The Persistence of Memory’. நினைவுகள் நிலையாகும்போது காலம் அங்கே உறைந்துபோய்விடும். சிலருக்கு சில நேரங்களில் காலம் என்பதே இல்லாத ஒன்றாகவும் ஆகிவிடும்.
இந்த ஓவியத்தில் பல கடிகாரங்கள் உள்ளன. ஆனால், அனைத்துமே உருகிய நிலையில் உள்ளன. ஓவியத்தில் காணப்படும் சூழலும் உயிர்ப்பு அற்று எந்த விதமான அசைவுகளுமற்று உறைந்து போயிருக்கிறது. ஓவியத்தில் இடம் பெற்றுள்ள மலை, ஓவியர் வாழ்ந்த கேடலோனியா நகரத்தில் உள்ள கேப் குரூஸ் மலை. ஓவியத்தில் பயன்படுத்தப்பட்ட வண்ணங்கள், காட்சிகளைப் பயன்படுத்திய விதம் அனைத்திலுமே ஒரு கனவுலகின் தன்மை இருக்கும்.