ரிஷபன்
ஸ்கூல்ல படிச்சவங்களை மறுபடி பார்க்கிறப்போ சிலர் நம்மள விட பெரிய லெவல்ல இருப்பாங்க; சிலர் சிங்கியடிச்சுட்டு இருப்பாங்க. ஆனா, சிலரோட சந்திப்புகள் நெகிழ்ச்சியா அமைஞ்சிடும். எனக்கும் அப்படியொரு அனுபவம் கிடைச்சுது.
நண்பர் ஒருத்தரைப் பார்க்கப்போன நான் ஏதோ தப்பான சந்துல நுழைஞ்சுட்டேன். எதிர்ல சைக்கிள்ல பால்காரர் ஒருத்தரு வெள்ளை வேட்டி சட்டையில வந்தாரு. வெவரத்தைச் சொன்னதும், “அது அடுத்த தெரு”னு சொல்லிட்டு என்னைய போகவிடாம வழிய மறிச்சாரு. “என்னைய தெரியுதா தம்பி...”னு அவரு சடார்னு கேக்கவும் எனக்கு லேசா மண்டை குழம்பிடுச்சி.
“யப்பா... ஸ்கூல்ல உங்கூட படிச்ச சக்கரவர்த்தி”னு அந்தாளு சொன்னதும் என்னையும் அறியாம, “அடப் பாவி நீயா?” போட்டுட்டேன். ஸ்கூல்ல படிக்கிறப்ப என்னைய என்னா மெரட்டு மெரட்டிருக்கான் தெரியுமா. படிக்காட்டியும் காலையில நாலு மணிக்கெல்லாம் எந்திரிச்சுருவான். வீட்ல நிக்கிற மாடுகள்ல பால கறந்து வாடிக்கை வீடுகளுக்குக் கொண்டுபோய் ஊத்திட்டுத்தான் ஸ்கூலுக்கு வருவான். வந்ததுமே அவனுக்கு தூக்கம் சொக்கும். வாகா கடைசி பெஞ்சுல போய் உக்காந்து தூங்க ஆரம்பிச்சுருவான். அவன் தூங்குறது தெரியாம இருக்க, அதுக்கு முந்துன பெஞ்சுல நானும் இன்னும் ரெண்டு பசங்களும் அவன மறைச்சிக்கிட்டு உட்காரணும். இதுல எதாச்சும் டெக்னிக்கல் ஃபால்ட் ஆனா, நித்திரை கலைஞ்சதும் ‘நச்’னு தலையில குட்டுவான்.