கணேசகுமாரன்
கவனிக்கத்தக்க கதை மாந்தர்களுடன் தனது முதல் தொகுப்பைக் கொண்டுவந்துள்ளார் சுரேஷ் மான்யா. கல் நாகம் தொகுப்பில் மொத்தம் ஒன்பது கதைகள். ‘இரவின் மயக்கம், ‘வெப்பாலை’ என வித்தியாசமான மனிதர்கள் நிறைந்த வாழ்க்கையின் கசப்பினை அதே சுவையுடன் தந்துள்ளார். ஆனாலும் சொல்லப்பட்ட விதத்தில் கசப்பும் ஒரு ருசியாகவே படிகிறது. வாழ்த்துகள் கதாசிரியருக்கு. ‘கல் நாகம்’ கதையில் அக்கா தம்பியாகவே வரும் இருவரின் உறவும் சொல்லப்பட்ட விதமும் வாசகரின் மனதில் உறைந்திருக்கும் பனி படிந்த கதையை தெளிவாக்கி துயர மவுனத்தைக் கூட்டிச் செல்கிறது. அனைத்துக் கதைகளுமே எங்கு நிகழ்கிறது என்பதில் வாசகருக்கு எவ்வித சந்தேகமும் எழுந்து விடாதபடி தெள்ளத் தெளிவாக்கியிருப்பதில் கதையினை மனத்தில் இருத்தி இலகுவாக வாசிக்கும் தன்மையை உருவாக்கி விடுகிறார்.
’இரவின் மயக்கம்’ கதையின் நாயகன் தனது ஜீவிதத்துக்கு மேற்கொள்ளும் செயல்கள் கற்பனைக்கு அப்பாற்பட்டு நிகழ்ந்தாலும் இதுபோன்ற மனிதன் வாழ சாத்தியமுள்ள ஒன்றைத்தான் இச்சமூகம் உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்பதை மிகப் பிரமாதமான புனைவில் சொல்லியிருக்கிறார். கதையின் இயல்பான உரையாடல் நம்பகத்தன்மைக்கு வழி வகுக்கிறது. கதையின் முடிவை வாசகர் ஊகத்துக்கே விட்டிருந்தாலும் இருள் அலறலை கணிக்க முடிகிறது. சித்தப்பாவின் மரணத்தில் தொடங்கும் ‘சித்திமா’ கதை முழுக்க முழுக்க சித்தப்பாவின் குரலை ஒலிக்கச் செய்தபடி நகர்கிறது.
கதை ஆரம்பத்திலிருந்தே தன் துயரம் சொல்லிச்செல்லும் சித்தப்பாவின் வார்த்தைகளை ஊன்றி கவனித்தாலே கதை முடிவில் வரும் அந்த அதிர்ச்சியை ஓரளவு முன்பே எதிர்கொள்ள முடியும்.