பைக்காரா அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் வெள்ளம் - ஆனந்தத்தில் சுற்றுலா பயணிகள்!

By ஆர்.டி.சிவசங்கர்

உதகை: ஊட்டி பைக்காரா நீர்வீழ்ச்சியில் பெருக்கெடுத்து கொட்டும் வெள்ளத்தை சுற்றுலாப் பயணிகள் ஆனந்ததுடன் கண்டு களித்து வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் பைக்காரா அருவியும் ஒன்று. உதகை அருகே பைக்காரா என்ற ஊரில் உற்பத்தியாகும் ஆறு, பைக்காரா அருவியாக உருவெடுக்கிறது. இயற்கை எழில் கொஞ்சும் மலைகளுக்கு நடுவே 55 மீட்டர் மற்றும் 61 மீட்டர் உயரத்தில் இருந்து கொட்டும் தொடர் அருவியாக அமைந்துள்ள இந்த பைக்காரா அருவி சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்து இழுக்கிறது.

இதனால் நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகள் அனைவரும் இங்கு செல்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர். பைக்காரா அணையில் இருந்து தினமும் மின் உற்பத்திக்காக தண்ணீர் திறக்கப்படுகிறது. தண்ணீர் திறக்கும்போது, மின் உற்பத்தி செய்த பின்னர் தண்ணீர் அணையில் இருந்து பைக்காரா வனப்பகுதிகளின் நடுவே உள்ள ஆற்றில் உள்ள பெரிய பாறைகள் மீது பாய்ந்து செல்லும் காட்சி ரம்மியமாக காட்சியளிக்கும்.

கோடை காலத்தில் கடும் வறட்சியால் ஆற்றில் நீர் வரத்து குறைந்து, நீர்வீழ்ச்சி முழுவதும் பாறைகளாக தெரிந்தது. அருவியில் நீர் இல்லாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில், கடந்த சில தினங்களாக உதகையில் பெய்த மழை காரணமாக பைக்காரா அணைக்கு நீர்வரத்து சற்று அதிகரித்துள்ளது.

இதனால் அவ்வப்போது மின் உற்பத்திக்காக அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் பைக்காரா நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனை இங்கு வரும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்ஃபி எடுத்து மகிழ்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE