அங்கீகரிக்கப்படாத ஆக்சிடென்டல் ஓவியம்!

By காமதேனு

ஜெ.சரவணன்

சில நேரங்களில் நாம் எதிர்பார்த்துச் செய்யும் ஒரு காரியம் அதற்கான தாக்கத்தை ஏற்படுத்தாமலும் போகும். அதேபோல், நாம் எதிர்பார்க்காத ஒரு விஷயம் பெரிய அளவில் தாக்கத்தையும் ஏற்படுத்திவிடும். அப்படித்தான் ஜேம்ஸ் அப்பாட் மெக்நீல் விஸ்ட்லர் வரைந்த ஒரு ஓவியம் அவருக்கு அப்படியொரு புகழைப் பெற்றுத்தந்தது. ஏனெனில், அந்த ஓவியமே ஒரு ‘ஆக்சிடென்டல்’ ஓவியம். அதை வரைவதற்கு முன்பு அவர் திட்டமிட்டது ஒன்று; முடிவில் நடந்தது ஒன்று.

அமெரிக்க ஓவியரான விஸ்ட்லர் தனது தாயுடன் லண்டனில் வசித்தார். 1871-ல், ஒரு மதிய வேளையில் ஓவியம் வரைவதற்காக ஒரு பெண்ணை மாடலாக ஒப்பந்தம் செய்திருந்தார். ஆனால், அந்தப் பெண் அன்று வரவில்லை. காத்திருந்து வெறுத்துப் போன விஸ்ட்லர், தனது தாயையே மாடலாக வைத்து ஓவியம் வரைய முடிவு செய்தார். ஏற்கெனவே மகனது தூரிகையில் தானும் ஓவியமாக வேண்டும் என்று விஸ்ட்லரின் தாய் பெரிய ஆர்வத்துடன் இருந்தார். ஆனால், விஸ்ட்லர் அவரது தாயை, ஓவியத்துக்கு மாடலாக நிற்கவைப்பதற்குள் படாதபட்டுவிட்டார்.

நிற்க வைத்து ஓவியம் வரையத் திட்டமிட்டிருந்தவர், தன் தாயை மேலும் சிரமப்படுத்தாமல் இருக்க முடிவெடுத்து, உட்கார வைத்தே வரைய ஆரம்பித்தார். அவர் என்ன கடுப்பில் இருந்தாரோ தெரியவில்லை, எந்தச் சலனமும் இல்லாமல், வெறித்த முகத்துடன் உட்கார்ந்திருந்தார். விஸ்ட்லரும் ஓவியத்தை வரைந்து முடித்தார். அவருக்கே ஆச்சரியம், அம்மாவின் ஓவியம் அவர் எதிர்பார்த்தைவிட அற்புதமாக வந்திருந்தது. கான்வாசில் வரையப்பட்ட இந்த ஆயில் ஓவியம் உலகையே விஸ்ட்லர் பக்கம் திருப்பியது. லியனார்டோ டாவின்சியின் மோனலிசா ஓவியத்துக்கு நிகரான புகழை இந்த ஓவியம் பெற்றது. தபால் தலை, சிலை எனப் பல்வேறு வடிவங்களில் இந்த ஓவியம் பயன்படுத்தப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE