கலப்பா

By காமதேனு

கலப்பையின் நினைப்பில்

என் புள்ளைக்கு
கலப்பான்னு பேரு வெக்கிறேன்னு
சொன்ன அப்பாவை
ஊரே ஒரு மாதிரியா பார்த்தது.
அப்பாவோ ஊரை
ஒரு மாதிரியா பார்த்தார்.
கலப்பாவின் கொம்பு
எங்கள் குடும்ப அன்பின் கூர்மை
நான்கு கால் நாகரிகம்.
அசலும் வட்டியும் சேர்ந்து
கடன் எங்களைக் கவிழ்த்தபோதும்
புள்ளய விற்க மாட்டோம்னு
கூடத்தில் பிடிவாதமா நின்னுது வீடு
கொல்லையில்
தலை நிமிர்ந்து நின்னுது மாடு.
வாழ்ந்துகெட்ட எங்கள் குடும்பத்தின்
மிச்சமிருக்கும் மரியாதை
எங்கள் கலப்பாதான்.
எங்க குல சாமி
கலப்பாவின் மொழியை
புரிந்துகொள்ள
அம்மா எங்கே கற்றாள் என்பது
யாருக்குமே தெரியாத
மூலிகை ரகசியம்.
ஊற வைத்த
பருத்திக்கொட்டை புண்ணாக்கை
கலப்பா சாப்பாடு என்றே
சொல்லிப் பழகிய எங்களுக்கு
ஒரே ஒரு வருத்தம்தான்
ரேஷன் கார்டுல
மாட்டின் பெயரெல்லாம்
சேர்க்க மாட்டாங்களாமே!

- மானா பாஸ்கரன்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE