இயற்கையின் அலறல்!

By காமதேனு

ஜெ.சரவணன்

உலகிலேயே அதிக விலைக்கு ஏலம் போன ஓவியங்களில் ஒன்று ‘The Scream'. இந்த ஓவியம் 1893-ல் வரையப்பட்டது. நார்வேயைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற ஓவியர் எட்வர்ட் முன்ச் வரைந்த ஓவியம் இது. இந்த ஓவியம் பலருக்கு வியப்பை ஏற்படுத்திய அதே சமயம் பலரை பயமுறுத்தவும் செய்தது!

எட்வர்ட் முன்ச் ஒரு மாலை வேளையில் சூரியன் மறையும் தருவாயில் ஓஸ்லோ நகரத்தின் வீதிகளில் நடந்துசெல்கிறார். அப்போது வானம் திடீரென்று ரத்தச் சிவப்பும் மஞ்சளும் கலந்த கலவையில் மாறியிருக்கிறது. உடனே, ஒரு பெரும் சத்தமும் பூமிக்கடியிலிருந்து எழுகிறது. அதைக் கேட்ட எட்வர்ட் முன்ச், பயந்துபோய் ஓலமிடுகிறார். அவர் எழுப்பிய ஓலம், அங்கே எழுந்த பெரும் சத்தத்துடன் கலந்து ஒருவிதமான சூன்யத்தை அங்கே ஏற்படுத்தியது. இந்த அனுபவத்தையே ஓவியமாக வரைந்த எட்வர்ட் முன்ச், இந்த  விளக்கத்தையும் தனது நாட் குறிப்பில் எழுதி வைத்திருக்கிறார். அதில், இயற்கை ஏதோ ஒரு காரணத்துக்கு அலறுகிறது என்று குறிப்பிட்டுள்ளார். இந்த ஓவியத்தை நான்கு விதங்களில் வரைந்திருக்கிறார் எட்வர்ட் முன்ச். அவற்றில் ஒன்றின் மூலையில், ‘இதுபோன்ற ஓவியத்தை புத்தி பேதலித்த நிலையில் இருப்பவனால்தான் வரைய முடியும்’ என்று அவரே குறிப்பிட்டும் இருக்கிறார்.

அதேசமயம், இந்த ஓவியம் குறித்த பல்வேறு பார்வைகளை பல்வேறு ஆய்வாளர்கள் முன் வைத்திருக்கிறார்கள். அவர் பார்த்ததாக சொன்ன காட்சியும் உணர்ந்ததாகச் சொன்ன ஓலமும் அவருக்குள்ளிருந்தே வெளிப்பட்டிருக்கலாம் என்றும், வாழ்க்கையின் உச்சகட்டபுறக்கணிப்பில் ஒருவனுடைய உண்மை நிலையின் பிரதிபலிப்பு இதுவென்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஓவியத்தில், சற்றுத் தொலைவில் இருவர் நடந்துபோய்க்கொண்டிருப்பார்கள். இதனடிப்படையில், “அவர் மிகுந்த புறக்கணிப்பிலும் விரக்தியிலும் இருந்திருக்கலாம் என்றும், நிலைகுலைந்த மனநிலையில் இத்தகைய உணர்வுக்கு ஆளாகியிருக்கலாம்” என்றும் கூறுகிறார்கள். மனிதனின் மனநிலை முழுச் சிதைவுக்குள்ளாகும்போது இருண்டுபோகும் வாழ்க்கையும், மரணத்தின் ஓலமும் தான் இறுதி உணர்வாக இருக்கும் என்பதையே இந்த ஓவியம் உணர்த்துகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE