பேசிக்கிட்டாங்க..!

By காமதேனு

ஏரல்
பஜார் டீக்கடை ஒன்றில்...
``அண்ணே நாலு டீ தாங்கண்ணே!''
``தம்பி டீ வெளியே கொண்டு போறதுக்கா? பிளாஸ்டிக் கப்பெல்லாம் கிடையாது. ஒரு அம்பது ரூபா குடுத்துட்டுப்போ! கிளாஸ திருப்பிக் குடுத்துட்டு பாக்கிய வாங்கிக்கோ! சரியா!''
"என்னண்ணே! எங்க உயிரையே பணயம் வச்சித்தான் உங்க கடை டீயை குடிக்கிறோம். நீங்க என்னடான்னா நாலு கிளாஸுக்கு எங்கள நம்ப மாட்டேங்கறீங்க!''
நாகர்கோவில், சாதிக் குல்

நாகர்கோவில்
கோட்டார் மளிகைக் கடை ஒன்றில் கடைக்காரரும் வாடிக்கையாளரும் ...
``அண்ணாச்சி... காலண்டர் அடிச்சிட்டீங்களா..? அப்படியே நமக்கு சாமி படம் போட்ட காலண்டர் ஒண்ணு குடும்...''
``என்ன அண்ணாச்சி... உம்ம படம் போட்ட காலண்டரை தர்றீரு..?''
``ஆமாம்... கடனுக்குப் பொருட்களை வாங்கிட்டு போயிடுறீங்க... திரும்ப கேட்டா, ‘அண்ணாச்சி உங்களை மறந்தே போச்சு’ன்னு டயலாக் விடுறீங்க. இனி மறக்க மாட்டீங்கல்ல... அதான்.
(வாடிக்கையாளர் முகத்தில், ஏன்டா காலண்டர் கேட்டோம் என்ற எண்ண ஓட்டம் தெரிகிறது)
பனங்கொட்டான் விளை, மகேஷ் அப்பாசுவாமி

தஞ்சாவூர்
ஒயின் ஷாப் வாசலில் இருவர்...
``புத்தாண்டுல இருந்து நான் சரக்கு சாப்பிடறதை விட்டுடலாம்னு இருக்கேன்டா!''
``ரொம்ப நல்ல விஷயம்டா! இது நூத்துக்கு நூறு நடந்திடும்!''
``எப்படிடா சொல்றே?!
``நான் புத்தாண்டுல இருந்து, எந்தப் பயலுக்கும் ஓசி சரக்கு வாங்கி ஊத்தறது இல்லேன்னு முடிவெடுத்துட்டேன்! அப்ப உன் சபதம் நிறைவேறித்தானே ஆகணும்!''
(மற்றவர் அப்பாவியாக முழிக்கிறார்)
தஞ்சாவூர், தே.ராஜாசிங்ஜெயக்குமார்

மதுரை
கீழவாசல் வங்கி ஒன்றில் கிராமத்து பெரியவரும் வங்கி பணியாளரும்...
``ஏன் சார்... என்னமோ பழைய ஏடிஎம் கார்டை மாத்தி ஜிப்பு வச்ச கார்டு தரீங்களாமே?''
``ஐயா அது ஜிப் இல்லை... சிப்! அதை வச்சுக்கிட்டிங்கன்னா யாரும் உங்க பணத்தை எடுக்க முடியாது. அது பாட்டுக்கு பாதுகாப்பா இருக்கும்''
``என்னவோ போங்க... அந்தக் காலத்துல ஜிப்பு வச்ச பையில கூட பணம் பத்திரமா இருக்கும். இந்த காலத்துல ஏடிஎம்முல வச்சும் களவாணி பயலுகளுக்கு பயப்பட வேண்டி இருக்கே?!''
(அருகில் நின்ற மற்ற வாடிக்கையாளர்கள் சிரிக்கிறார்கள்)
மதுரை, எம்.விக்னேஷ்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE