பத்தி பத்தியாய் எழுதினாலும் புரியவைக்க முடியாத விஷயத்தை ஒரே ஒரு புகைப்படம் எளிதில் புரியவைத்துவிடும். அப்படி, ஒரு சமூகத்தின் வலி, துக்கம், கொண்டாட்டம் எனக் கலவையான உணர்வுகளைப் போகிற போக்கில் புரியவைத்துச் சென்ற புகைப்படங்களையும் அதற்காகப் பேசப்பட்ட புகைப்படக்காரர்களைப் பற்றியும் இந்த வாரத்திலிருந்து பார்க்கலாம்.
2015-ம் ஆண்டில் ஒட்டுமொத்த உலகின் மனசாட்சியை உலுக்கிய படம் என்று ஆலன் குர்தியின் படத்தைச் சொல்லலாம். கிரேக்க நாட்டின் கடற்கரைப் பகுதியில் மணலில் முகம்புதைந்த நிலையில் கிடந்த ஆலன் குர்தியின் உடல், நிலுபர் டெமிரின் கேமரா வழியாக பதிவாகி உள்நாட்டுப் போர்களால் பாதிக்கப்படும் அகதிகளின் அவலத்தை உரக்கச் சொன்னது.
தன் மரணத்தால் உலகை உலுக்கிய ஆலன் குர்தி, சிரியாவின் கொம்பானி நகரத்தைச் சேர்ந்தவன். உள்நாட்டுச் சண்டையால் சிரியாவின் அமைதி பாதிக்கப்பட, 3 வயதான இளைய மகன் ஆலன் குர்தியையும், 5 வயதான மூத்தவன் காலிப் குர்தியையும் அழைத்துக்கொண்டு மனைவியுடன் கனடாவில் தஞ்சம் புக திட்டமிட்டார் அப்துல்லா குர்தி. கனடாவில் இருந்த அவரது சகோதரி இதற்கான செலவை ஏற்பதாகக் கூறியிருந்தார். ஆனால், அகதிகள் விஷயத்தில் கனடா அரசு கொண்டிருந்த கொள்கை மாற்றத்தால், அப்துல்லா குடும்பத்துக்கு கனடா வருவதற்கான அனுமதி நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில், சிரியாவில் இருந்து துருக்கிக்குச் சென்று அங்கிருந்து கிரேக்கத்துக்கு செல்லும் ஒரு நெரிசல் மிகுந்த படகில் 3 லட்ச ரூபாய் தந்து, குடும்பத்துடன் புறப்பட்டார் அப்துல்லா. ஏராளமான அகதிகளின் நம்பிக்கையைச் சுமந்து, துருக்கியின் போட்ரம் பகுதியில் இருந்து அந்தப் படகு புறப்பட்டது.
கிரேக்க நாட்டில் உள்ள கோஸ் தீவில் அவர்களை இறக்கி விடவேண்டும். ஆனால், கடலில் கொந்தளிப்பாலும் படகில் அதிகம் பேர் இருந்ததாலும் புறப்பட்ட 3 கிலோ மீட்டர் தொலைவிலேயே படகு கவிழ்ந்தது. அப்துல்லாவின் கண் முன்பே அவரது மனைவியும் மகன்களான ஆலனும், காலிப்பும் தண்ணீரில் மூழ்கினர்.
அடுத்த நாள் காலை கடற்கரை ஓரம் முகம் புதைத்துக் கிடந்த ஆலனின் உடல், படகில் வந்தவர்களுக்கு நேர்ந்த கதியை உலகுக்குச் சொன்னது. நிலுபர் டெமிர் (Nilufer Demir) என்ற பத்திரிகை புகைப்படக்காரர் இதைப் படமெடுத்து வெளியிட, சிரிய அகதிகளின் அவலத்தைக் கண்டு உலகமே அதிர்ந்தது.
நிலுபர் டெமிர்
துருக்கி நாட்டைச் சேர்ந்த பத்திரிகை புகைப்படக்காரரான நிலுபர் டெமிர் (32 வயது), உள்நாட்டுப் போரால் அவதிப்பட்டு பிற நாடுகளில் தஞ்சம் புகும் அகதிகளின் வாழ்க்கையைப் படம்பிடித்துக் காட்டுபவர். ‘டோகன் நியூஸ் ஏஜென்ஸி’யில் பணியாற்றும் அவர் 2015-ல், ஆலன் குர்தியின் இந்தப் படத்தை எடுத்தார். இதற்காக துருக்கி போட்டோஜர்னலிஸ்ட் அசோசியேஷனின் சிறந்த படத்துக்கான விருதை வென்றார்.
“போட்ரம் கடற்கரைப் பகுதியில் ஆலனின் உடலைக் கண்டதும் முதலில் எனக்கு தூக்கிவாரிப் போட்டது. அவனுக்கு என்னால் உதவ முடியவில்லையே என்று மனம் தவித்தது. அவனுக்கு உதவ முடியாவிட்டாலும் அவனைச் சார்ந்த மக்களுக்காவது உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் இப்படத்தை எடுத்தேன்’’ என்று பதிவு செய்திருக்கிறார் நிலுபர் டெமிர்