நிழற்சாலை

By காமதேனு

மழைக்கு
உன் பெயர்
வானம் இருண்டுவிட்டது
இன்னும் சற்றுநேரத்தில்
பெய்யப்போகும் மழைக்கு
உன் பெயர் வைத்திருக்கிறேன்.
நனையாத உடலுக்கு குடையும்
நனையும் மனசுக்கு 
உன் நினைவுகளையும்
தயாராக வைத்திருக்கிறேன்.
மழையும் நீயும் ஒன்றுதான்
வரலாம், வராமலும் போகலாம்.
- வலங்கைமான் நூர்தீன்

மனசு வரையும் பென்சில் கோடு
வெறுப்புடன் விளையாடிக் களித்துக் 
கிடப்பதில்லை இந்த உள்ளம்
அன்பின் சிறு ஆறுதலில்
மகிழ்ச்சிப் பெருக்கெடுத்து
சுருண்டுவிடும்  மரவட்டை இது,
வெறுப்புகளின் உச்சபட்சத்தில் 
சொற்கள் தீயாய் கனன்று 
சுட்டெரிக்கும்போது
விழுங்கவும் தெரிந்து வைத்திருக்கிறது
இந்த மனது 
நெருப்புக்கோழியாய்!
- ஜீவரேகா

கையில் தேங்கிய புன்னகை
பல்லவன் விரைவு ரயிலில்
அப்பா அம்மா நடுவில் 
ஆரஞ்சு நிற ஆடையிலிருந்த நிலாவுக்கு
நாலு வயதிருக்கலாம்
ஏறி உட்கார்ந்ததில் இருந்தே
என்னிமைகள் உறங்கி வழிந்தன.
விழுப்புரத்தின் வடை சமோசா குரல்களில்
சிறு விழிப்புற்றாலும்
தூக்கம் துண்டிக்கப்படவில்லை.
தாம்பரத்தில் இறங்கி 
நடந்தபோதுதான் தெரிந்தது
அந்த நிலாவிடம் சேர்க்கப்படாத
ஒரு சிறு புன்னகை
என்னிடம் மிச்சமிருந்தது!
-  சுபாஷ் கலியன்

பிஞ்சுத் தூரிகையும் கொஞ்சு பூனையும்
மகன் வரைவதற்காக
விதவிதமான புலி படங்களை
காட்டிக்கொண்டிருந்தார் தந்தை.
சட்டென்று ஒரு படத்தைக் காட்டி
அந்தப் புலியை வரைகிறேன்
என்றான் மகன்.
அது பூனை மாதிரியிருக்கு
என்று சொன்ன தந்தையிடம்
‘அப்ப நான் பூனையையே
வரைந்துவிடுகிறேன்’
என்றான் மகன்!
- மதிபாரதி

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE