ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் தனியே பிரிந்தது அங்குள்ள மக்கள் மீது பல தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கிறது. ஒன்றாக இருந்தபோது பலருக்கும் வேலைவாய்ப்பு, வாழ்க்கை உள்ளிட்டவை சாத்தியமாகின. பிரிந்த பிறகு பல விதங்களிலும் தாங்கள் மகிழ்ச்சியை இழந்திருப்பதாகவே மக்கள் உணர்கிறார்கள். இதனை உலகின் முக்கியமான 45 ஓவியர்கள் ஓவியங்களாகப் பதிவு செய்தார்கள். அவர்களுள் குவென்டின் பிளேக், கிளாட் டுபோயிஸ், ஜிம் ஃபீல்ட், எமிலி கிராவெட், ஜுடித் கெர், ஆலிவர் ஜெஃபர்ஸ், லிதியா மாங்க்ஸ் போன்ற ஓவியர்கள் அடக்கம். இவர்களின் ஓவியங்கள் தொகுக்கப்பட்டு ‘Drawing Europe Together: Forty-five Illustrators, One Europe’ என்ற புத்தகமாக வெளியிடப்பட்டிருக்கிறது.
ஸ்வர்ணலதாயிஸம் பேசும் நாடோடி
கணேசகுமாரன்
மறைந்த பின்னணிப் பாடகி ஸ்வர்ணலதா பாடிய பாடல்கள் பற்றி நாடோடி இலக்கியன் அவரது முகநூல் பக்கத்தில் எழுதி பெரும் வரவேற்பைப் பெற்ற கட்டுரைகள், தனியொருத்தி என்று தொகுப்பாக வந்திருக்கிறது. ஒரு பாடல், அதை ஸ்வர்ணலதா பாடிய விதம், பல்லவி, சரணங்களில் அவர் வெளிப்படுத்திய பல்வேறு நுணுக்கங்கள் குறித்து அலசி ஆராய்கிறது தொகுப்பு. ஆனால், எதுவுமே மனதில் படியாமல் வெறும் தகவல்களாகவே நழுவிச் செல்கின்றன. விக்கி பீடியாவிலும் யு டியூபிலும் கிடைத்துவிடும் ஸ்வர்ணலதா பாடல்கள் குறித்த தகவல்களை சுவாரசியப்படுத்த வேண்டியது கட்டுரையாளரின் தனிப்பட்ட அனுபவம். அப்படி எதுவுமே தென்படவில்லை. ஸ்வர்ணலதா தனித்த குரல்வளம் உடைய மிகச் சிறந்த பின்னணிப் பாடகி என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. இதை எவ்வாறு நூலாசிரியர் சொல்கிறார் என்பதில்தான் சுவாரசியம் அடங்கியுள்ளது.