கரம் சிரம் புறம் நீட்டாதீங்க செடிகளே!

By காமதேனு

கே.கே.மகேஷ்

 மதுரைப் பக்கம் நாலு வழிச்சாலை போட்ட புதுசு. நல்ல மழை. ரோட்டோரத்துல பைக்கை நிப்பாட்டிட்டு, குறுக்க நடந்து நடு சென்டருக்குப் போனேன். வரிசையா நின்னதுல ஒரு அரளிச்செடியைப் பிடுங்கப் போகும்போது 2 பேர் பைக்ல வந்துட்டாங்க. டபக்குன்னு எந்திரிச்சி, உச்சா போறது மாரி சீனைப் போட்டேன். சட்டுன்னு வேகத்தைக் குறைச்சி என்னைய குறுகுறுன்னு பாத்தாங்க. எனக்கு பக்குன்னுது. அப்ப ஒருத்தன் சொன்னான், “எந்தவூர்க்காரன்டா இவன்? ரோட்டோரத்துல பைக்க நிப்பாட்டிட்டு நடு ரோட்டுல போய்..!?”ன்னு. காது கேட்காதது மாதிரி கம்முனு நின்னேன். அவங்க போனதும் அவசரமா அரளிச்செடியைப் பிடுங்கிக்கிட்டு வீட்டுக்குப் போயிட்டேன். 600 ரூபா புது ஜீன்ஸ் பேன்ட் செம்மண் கலர்ல மாறுனது கூட பெருசில்ல, “ஒரு செடிக்கு நர்சரிக்காரனுக்கு 25 ரூபா அழாம தப்பிச்சோம்டோய்”ன்னு அவ்ளோ சந்தோஷம்.

ஒரு மழை திடீர்க் கவிஞர்கள உருவாக்குற மாதிரி, திடீர் விவசாயிகளையும், மீனவர்களையும் கூட உருவாக்கிடும். மழை பெஞ்சதும் மண்ணைக் கிளறப் புறப்பட்டா, உங்க மரபணுவுலேயும் ஒரு வெவசாயி இருக்கான்னு அர்த்தம். என்ன சில பேரோட மரபணுவுல இருக்கிற வெவசாயி கஞ்சப்பிசுனாறியா இருக்க வாய்ப்புண்டு. விதையையோ, நாத்தையோ காசு குடுத்து வாங்க மாட்டாங்க.

சென்னை, மதுரை மாதிரியான பெரிய ஊர்கள்ல தொட்டியும், செடியும் மட்டுமா? மண்ணையும், சாணி உரத்தையும் கூட காசு குடுத்துத்தான் வாங்கணும். என் நண்பர் ஒருத்தர் (பிறப்பால் கிராமத்தான்) அசைன்மென்ட் போறப்ப பைக் பவுச்சுல ஒரு கட்டைப்பையும், சிரட்டையும் வெச்சிருப்பார். ரோட்டோரத்துல செம்மண் பூமி தெரிஞ்சாப் போதும், வண்டிய ஓரமா நிப்பாட்டிட்டு, மண்ணை அள்ளி கட்டைப்பையில போட்டு வீட்டுக்குக் கொண்டாந்துடுவார். “ஒரு கட்டைப்பை மண்ணு, 100 ரூபாய்ன்னா எவன் காசு குடுத்து வாங்குவான்?”ம்பாரு.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE