நிழற்சாலை

By காமதேனு

தேர்வுக் காலம் பேரோசை!

முடிவுகளற்ற திரைச்சீலையைப் போல
விரிந்து கிடக்கிறது காலம்
தேர்வறைப் பணியின்போது.
ஒற்றைக் காகத்தின் கரைதல்.
காற்றுடன் கைகோக்கும் அணில்கள்.
தொலைவில் அதிரும் ரயிலோசை.
எப்போதேனும் கடக்கும் வாகன ஒலி.
தன்னியல்பில்லா அமைதியில்
பள்ளிக்கூடப் பிள்ளைகள்.
தேர்வு முடிவுக்கான மணி ஒலித்ததும்
பேரோசையுடன் ஒருகணம்
நின்று சுழல்கிறது உலகம்.
- மயிலம், அருண்மொழி

மழைப் பொழுதின் ஓவியங்கள்...

பாதத் தூரிகையில் சகதி குழைத்து
மழைப் பொழுதை
வீடு முழுவதும்
ஓவியமாய் தீட்டுகின்றன
குழந்தைகள்.
சமையலறையிலிருந்து வசை மழை
பொழியத் தொடங்குகிறது.
அப்போதுதான்
வீடு திரும்பும் அப்பா
வாசலில் கிடந்த சாக்கில்
ஓவியத்தை
ஒளித்து வைத்துவிட்டு
உள் நுழைகிறார்!
- மதுரை, பா.ரமேஷ்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE