விஜய் புதிய கட்சி தொடங்கினால்..!

By காமதேனு

2041 ஏப்ரல் 5-ம் தேதி. தளபதி விஜய்... மன்னிக்கவும், தலைவர் விஜய் புதுக் கட்சி தொடங்கியிருக்கிறார். (ஆண்டில் ஏதோ தவறா இருக்கேன்னு நினைக்க வேணாம். ஆனானப்பட்ட ரஜினியே 67 வயசுலதான் அரசியலுக்கு வந்திருக்கிறார்(?!). விஜய்க்கு 68 வயசாவது ஆக வேண்டாமா?)

மதுரையில் நடந்த கட்சித் தொடக்க விழாவுக்குச் சென்றிருந்த (உடான்ஸ் தான்!) நமது செய்தியாளர் சங்கவி, அதுபற்றித் தரும் நேரடி ரிப்போர்ட்  இது...

விஜயகாந்த், கமல்ஹாசன் வரிசையில் நடிகர் விஜய்யும் கட்சித் தொடக்க விழாவை ராசியான மதுரை நகரில் நடத்தினார். ஏற்கெனவே ‘வேலாயுதம்’ இசை வெளியீட்டு விழாவை மதுரையில் நடத்தி, தயாரிப்பாளர் செலவிலேயே நலத்திட்ட உதவிகளை வழங்கியதுபோல, கட்சித் தொடக்க விழாவும் விஜயின் ‘முனிசிபாலிட்டி’ புதுப்பட இசை வெளியீட்டு விழாவோடு சேர்ந்து நடந்தது. தயாரிப்பாளர் மீது ஊழல், வரி ஏய்ப்பு, கதை திருட்டுப் புகார்கள் இருந்தாலும், இந்தப் படமானது ஊழலுக்கு எதிரான கதையம்சம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்த்தாய் வாழ்த்தை ‘அழகிய தமிழ் மகன்’ விஜய்தான் பாட வேண்டும் என்று ரசிகர்கள் கேட்டுக்கொண்டதால், வித்தியாசமான ‘ராகத்தில்’ அவர் பாடினார். அப்போது மேடையின் பின்னால் லேசர் ஒளியில் ‘இந்தப் பாடலைப் பாடிக்கொண்டிருப்பவர் உங்கள் விஜய்’ என்று ஒளிர்ந்தது. அது தமிழ்த்தாய் வாழ்த்து என்பதைக்கூட பொருட்படுத்தாமல், ஒன்ஸ்மோர் கேட்டார்கள் ரசிகர்கள்... ஸாரி தொண்டர்கள்! அவர்தான் தொண்டர்கள் குரலுக்கு மதிப்பு கொடுக்கும் தலைவராயிற்றே? “ஓகே நண்பா!” என்று சொல்லி திரும்பவும் பாடி, ஆடினார். சம்பந்தமே இல்லாமல் குட்டிக்கதைகளையும் சொன்னார்.

“எனது நெஞ்சில் குடியிருக்கும் எனது நண்பர், நண்பிகள் எல்லாருக்கும் வணக்கம்” என்று பேச்சை ஆரம்பித்த விஜய், “சந்திரசேகர் விஜய் ஒருவிரல் மக்கள் இயக்கம்” என்று கட்சியின் பெயரை அறிவித்ததும் கூட்டம் ஆர்ப்பரித்தது. “நம் கட்சியின் கொள்கை திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, மநீம, ரஜினியின் பாபா ராஜ்ஜியம் உள்ளிட்ட கட்சிகளின் ஊழலை ஒழிப்பது. ஒட்டுமொத்தமாக ஊழலை ஒழிப்பது சாத்தியமில்லை என்பதால், முதலில், எதிர்க்கட்சிகளின் ஊழலை ஒழிப்போம்” என்று அவர் மிகவும் யதார்த்தமாக பேசியது மக்களைக் கவர்ந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE