இசைபட வாழ்தல்!
பூவரசம் பூ உதிரும் வேளையில்
அந்தியில் மஞ்சளை பூசிக்கொள்கிறது
அன்றைய சூரியன்.
அந்தப் பூ மெல்ல மெல்ல
இசைக்கேற்றவாறு
கவிழ்ந்தும் நிமிர்ந்தும்
நடனமாடி விழும்போது
தூரத்தில் கேட்கிறது
சிறுவனின் வாயில் ஒலிக்கும்
பூவரசம் இலை பீப்பி!
- வலங்கைமான் நூர்தீன்
காணவே இல்லை
பொட்டல்வெளிப் புதர்களின் நடுவில்
புன்னகைத்தபடி
ஆடுமேய்க்கும் ஏழைச் சிறுமி
கை காட்டுகின்ற
ரயில் பயண ஞாபகத்தில்
வானூர்தியின் உள்ளிருந்து
ஜன்னல் வழி வெளியே பார்த்தேன்.
பொட்டல்வெளியாய் வானம் இருந்தது.
புதர் புதராக மேகங்களும் இருந்தன.
காணவே இல்லை
சிறுமியையும் ஆடுகளையும்!
- கொளத்தூர் கீர்த்தி