இரண்டாம் உலகப் போர் ஆவணங்களின் புத்தகம்

By காமதேனு

உலகப் போர் குறித்து எங்கேனும் யாரேனும் பேசிக்கொண்டேதான் இருக்கிறார்கள். அதிலும் இரண்டாம் உலகப் போர் மிக முக்கியமானதும் கூட. அது தொடர்பான பதிவுகளில் உண்மையும் பொய்யும் கலந்தே இருக்கிறது. அத்தகைய இரண்டாம் உலகப் போரின் போக்கை நிர்ணயித்த முக்கிய ஆவணங்கள், வின்ஸ்டன் சர்ச்சில் உரையின் ஒரிஜினல் பேப்பர், டங்கிர்க் இடத்திலிருந்து வீரர்களை வெளியேற்றுவதற்காகக் கைப்பட வரைந்த திட்ட வரைபடம், ஹிட்லர் கையெழுத்திட்ட போலந்து முற்றுகை உத்தரவு ஆகியவற்றை லண்டனில் உள்ள இம்பீரியல் போர் அருங்காட்சியகம் 'The War on Paper' என்ற புத்தகமாக வெளியிட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தின் ஆவணங்கள் பிரிவின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் அந்தோனி ரிச்சர்ட் இந்த ஆவணங்களைக் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேல் சேகரித்ததாகக் கூறுகிறார். “இந்தப் புத்தகத்தில் ஆவணங்கள் மட்டுமல்லாமல், கடிதங்கள், டைரிக்குறிப்புகள், வரைபடங்களும் உள்ளன. இந்தப் புத்தகம் படிப்பவர்களுக்கு இரண்டாம் உலகப் போர் குறித்த சில உண்மைகளை உணர்த்துவதோடு, சுவாரஸ்யத்தையும் அறிவுத் தேடலையும் தரும் என்று நம்புகிறேன்” என்று கூறியுள்ளார் ரிச்சர்ட்.

துரோகத்தின் தோலுரிப்பு

விவசாயத்தை மையப்படுத்திய கலப்பை என்ற தனது முதல் நாவலுக்குப் பிறகு இரண்டாவது நாவலாக பலிகிடா எழுதியிருக்கிறார் என். சுவாமிநாதன். சுயநல அரசியல்வாதிகளின் கொடூர அரசியலுக்கு பலியாகும் அப்பாவி ஏழைத் தொண்டனின் கதைதான் பலிகிடா. நாவலின் பெரும் பலமே குமரி வட்டார வழக்குப் பேச்சும், கதாபாத்திரங்களின் வாழ்வியலான சுற்றுப்புறச் சூழலும்தான். நாவலாசிரியர் சட்டம் பயின்றவர் என்பதாலே அரசியல் ரீதியான கருத்துகளை மிகத் துணிச்சலாகக் கையாண்டிருக்கிறார். நடப்பு அரசியலின் பல அதிர்வுகளை எவ்விதப் பாசாங்குமின்றி அப்படியே வெளிப்படுத்தியிருக்கிறார். அது நாவலை மனதுக்கு நெருக்கமாக உணரவைக்க உதவுகிறது. அதேபோல் எளிய மக்களின் துயரங்களை அவல நகைச்சுவையாகக் கையாண்டிருக்கும் உத்தி அந்த மக்களுக்கே உரிய வெள்ளந்தித்தனத்தை வெளிப்படுத்துகிறது. நாவலின் நாயகர்களான முத்தையாவும் இசக்கிமுத்துவும்தான் பலிகிடாக்கள் என்றாலும் துரோக அரசியல் புரியும் அங்கமுத்து, கலைச்செல்வன் என அனைவருமே ஏதோ ஒருவிதத்தில் தேர்தல் சதுரங்கத்தில் பகடைக்காய்களாக உருட்டப்படத்தான் செய்கிறார்கள். நடப்பு அரசியலின் அவலத்தை எவ்வித சமரசமுன்றி முன்வைத்த நாவலாசிரியருக்கு பாராட்டுகள். 

கட்சி வேறுபாடின்றி அனைத்துக் கட்சிகளையும் விமர்சனத்துக்குள்ளாக்கும் நாவலாசிரியர் தான் சொல்ல நினைத்ததை நாவல் என்ற வகைமைக்குள் பொருத்தச் சிரமப்பட்டிருக்கிறார். முத்தையா, இசக்கி முத்து என்ற முதன்மை கதாபாத்திரங்களின் வழியே சொல்ல முடிந்திருக்க வேண்டியதை பேச்சாளர் கதாபாத்திரத்தைப் புகுத்தி வாசகருக்குள் அயர்ச்சியை ஏற்படுத்துகிறார். அதேபோல் விளக்கமாய் சொல்ல வேண்டிய காட்சிகளை ஜஸ்ட் லைக் தட் கடப்பதும் நாவலுக்குத் தேவையற்றவற்றை விவரணைகளில் காட்சிப்படுத்தியிருப்பதும் நெருடல். இறுதியில் நாயகனுக்கு ஏற்படும்முடிவை முன்பே யூகித்திருந்தாலும் பழிவாங்க நாயகனின் நண்பன் இறங்கிச் சிறைக்குச் செல்வதெல்லாம் 90-களில் வெளிவந்த வணிக சினிமாக்களை ஞாபகப்படுத்த முயல்கிறது. இசக்கி சிறைக்கு செல்வதோடு முடிந்திருக்க வேண்டிய கதையை 9 வருடங்களுக்குப் பிறகு என்று சப்டைட்டில் போட்டு கதை சொல்ல முயன்றிருப்பது நாவல் என்ற கட்டமைப்பை சிதைக்கிறது. தரவுகளின் அடிப்படையில் சம்பவங்களை அடுக்குவது சுவாரஸ்யமான கட்டுரைக்கே உதவும். கேள்விப்பட்ட நிஜத்தை தனது எழுத்துக் கற்பனையில் எழுத முற்படும் எழுத்தாளன் புனைவு என்ற ஒன்றை எந்தளவுக்கு சித்திரிக்கிறான் என்பதிலேயே நாவலின் சுவாரஸ்யம் அடங்கும். அவ்வகையில் சற்றே தடுமாற்றத்துக்கு உள்ளானாலும் இன்றைய சமூகத்துக்கு அவசியமான ஒரு விஷயத்தை தைரியமாய் பேச முயன்றதற்கு வாழ்த்துகள்.    

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE