திருவிழாவுக்கு வந்த கோமாளிய, ‘காதல் யானை’ன்னு சொல்லலாம். ஏன் தெரியுமா?
வில்லுப்பாட்டும் கரகாட்டமும் இல்லாத கோயில் திருவிழா தென்மாவட்டத்துல அபூர்வம். வில்லு நடக்கும்போது 144 தடை உத்தரவு போட்ட மாதிரி கோயிலே வெறிச்சோடிப் போகும். நாலஞ்சி கிழவிங்க கால் நீட்டி உட்காந்துக்கிட்டு தூங்கி விழும். ஒரே ஒரு கிழவி மட்டும் 65-வது வருஷமா அதே சுடலைமாடன்/ ராமாயண கதையை புதுசா கேட்கிற மாதிரியே கேட்டுக்கிட்டு இருக்கும். அந்தப் பழைய ‘சிசிடிவி கேமராவு(!)’க்குப் பயந்து, வில்லுக்காரங்க பொட்டிய கட்டாம விடியவிடிய கதறிக்கிட்டு இருப்பாங்க.
அதுவே கரகாட்டம் நடந்தா, கூட்டம் கும்மும். அசலூர்ல இருந்தெல்லாம் ரசிகர்கள் படையெடுப்பாங்க. ராத்திரி 12 மணிக்கு மேல ஆகிடுச்சின்னா, பெருசுங்க எல்லாம் தூக்கம் வருதுன்னு கிளம்பிடுவாங்க. அப்புறம் இளவட்டங்கள், சிறுசுகளின் ராஜ்யம்தான். எல்லாத்துக்கும் காரணம் கோமாளிதான். தலைவன் வாயைத் திறந்தா, இளசுங்க குலுங்கிக் குலுங்கிச் சிரிப்பாங்க.
சிரிச்சுக்கிட்டே பசங்க பொண்ணுங்களையும், பொண்ணுங்க பசங்களையும் ஓரக்கண்ணால பார்த்துக்குவாங்க. இடையிலேயே பொண்ணுங்க வீட்டுக்குக் கிளம்ப, பய எந்தச் சந்து வழியாகவாவது அந்தப் பொண்ணை மடக்கி, காதலைச் சொல்லிடு வான். இப்பிடி ஒவ்வொரு கரகாட்டம் முடியும்போதும் நாலஞ்சி, காதல் ரோசா புதுசாப் பூத்திடும். கரகாட்டம் மட்டுமில்ல, ‘வள்ளி திருமண’ நாடகம், ‘ராஜாராணி ஆட்டம்’, ‘டென்டு சர்க்கஸ்’ எல்லாத்துலேயும் கோமாளிதான் காதல் யானை! என்ன ஒரு கேடுன்னா, சில சமயம் கல்யாணம் ஆனவங்களுக்கே காதல் வர வெச்சிடுவாங்க கோமாளிங்க!