கண்காட்சியைப் பார்த்தாவது காவல்துறை திருந்துமா?

By காமதேனு

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் இணைந்து தங்களின் அறுபதுக்கும் மேற்பட்ட கலை வேலைப்பாடுகளைக் கண்காட்சிக்கு வைத்துள்ளனர். இந்தக் கண்காட்சிக்கு இவர்கள் வைத்திருக்கும் பெயர் ‘புரோக்கன் விண்டோஸ் மியூசியம்’. ‘புரோக்கன் விண்டோஸ்’ என்பது அமெரிக்காவில் 1982-ல் அமல்படுத்தப்பட்ட சட்டம். இந்தச் சட்டத்தின்படி அமெரிக்க போலீஸ் சந்தேகப்படும் யாரையும் நிறுத்தி அவர்களைச் சோதனையிடலாம். இச்சட்டம் கறுப்பின மக்களுக்கு எதிராக மட்டுமே அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்தது. அப்பாவிகளும் சில கலைஞர்களும் கூட இந்தச் சட்டத்தின் மூலம் கைது செய்யப்பட்டு காவல்துறையின் தாக்குதலுக்கு ஆளானார்கள். சிலரது உயிரும் பறிக்கப்பட்டது. இன்றுவரை சர்ச்சையாகப் பேசப்படும் இந்தச் சட்டத்தை விமர்சிக்கும் பொருட்டு, இச்சட்டத்தின் கீழ் இதுவரை நடந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து ஓவியம், கலைப் பொருட்கள் ஆகியவற்றை உருவாக்கி இந்தக் கண்காட்சியில் வைத்திருக்கிறார்கள். இது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. இந்தக் கண்காட்சியின் மூலமாவது காவல்துறை தங்களைத் திருத்திக்கொள்ளும் என்பது இந்தக் கலைஞர்களின் நம்பிக்கை.

ஞாபகப்படுத்தும் கவிதைகள்

நவீன, புது கவிதைகளில் தனது தடத்தை அழுந்தப் பதித்துவரும் கு. இலக்கியனின் புதிய கவிதைத் தொகுப்பு. தொகுப்பின் முதல் கவிதையிலிருந்தே சமூகத்தின் மீதான தனது அக்கறையை வெளிப்படுத்துகிறார் கவிஞர். இருந்தும் அங்கங்கே காதலின் முத்தங்களின் வீச்சங்களையும் பதிவு செய்து போகிறார். கரிசல் மண்ணிலிருந்து புறப்பட்டு வரும் கவிதைகள், நூலாசிரியர் வாழ்ந்த வளர்ந்த வாழ்வினைப் பேசினாலும் மண் துறந்து நகரத்து அபார்ட்மென்ட்டுக்கு வாழ்க்கைப்பட்டுப்போகும் கையறு நிலையையும் பேசிப் போகிறது. ஆசிரியர் சொல்வதுபோல் நிறமிழந்த வீட்டுத் திண்ணைகள் அம்மாவை மட்டுமா ஞாபகப்படுத்துகின்றன? பல கவிதைகள் அதற்குப் பின்னால் உள்ள நெடுந்துயரக் கதைகளை ஒளித்துவைத்தே போகின்றன. உதாரணமாக ‘மழையில் மிதக்கும் நினைவுகள்’ கவிதையின் முடிவில் வரும் அப்பாவின் இழப்பு ஞாபகம் அவர் வாழ்க்கையை அறியும் ஆவலைத் தூண்டுகிறது. ஒரு பெண்ணின் மாதாந்திர அவஸ்தையைப் பயணத்தின் ஊடாகக் கூறிப்போகும் தலைப்புக் கவிதையான ‘சாபத்துக்குள் பயணிக்கும் ரயில்’ தொகுப்பில் நல்லதொரு கவிதை. ‘மோகனா என்றொரு நதி’ கவிதையை மட்டும் வைத்துக்கொண்டே நிறைய பேசிவிடலாம் போல் அத்தனை அழகியலாகவும் இயல்பாகவும் கவித்தன்மையுடன் அனுபவம் கூட்டுகிறது. இலக்கியனுக்குள் இருக்கும் எளிய மனிதனின் சொல்லாட்சியாக பல கவிதைகள் சின்னச் சின்னத் தெறிப்புகளில் நம்மை வெவ்வேறு அனுபவங்களுக்குள் கடத்திச் செல்கின்றன. களவு, சூழல், வாசல் போன்ற சின்னஞ்சிறு கவிதைகள் சமகால அவலங்களை ஆணித்தரமாகப் பதிவு செய்கின்றன.

நூலாசிரியர் சொல்வதுபோல் ‘நதியின் பேரமைதியை சிறு இலையொன்று கலைத்துவிடும்’ மாயாஜாலம் இந்தத் தொகுப்பில் நிறைய நிகழ்ந்திருக்கலாம். அதற்கான வாய்ப்பிருந்தும் வெறும் விவரணைகளில் தப்பிப்போகின்றன பல கவிதைகள். ஒரு வினா தொடுக்கும் பாணியிலோ ஒரு பதில் உரைக்கும் விதத்திலோ சில கவிதைகள் முடிந்துவிடுவது உறுத்தல். அக்ரஹாரத்தில் கருவாடு போன்ற கவிதையை இன்னும் நிதானித்து எழுதியிருக்கலாம். கவிஞன் சுதந்திரமானவன்; அதனாலே வண்ணமய
மான பூனைக்குட்டிகள் ஒரே மியாவ்வினை உதிர்த்தபடி தொகுப்பெங்கும் அலைகின்றன. நாம் இழந்துவிட்ட பல நிஜங்களையும் ஞாபகப்படுத்திப்போகும் இத்தொகுப்பில் தையல்காரனின் ஏக்கம் குறித்த கவிதைகளையெல்லாம் நீக்கியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். மென்மேலும் வளர வாழ்த்துகள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE