எழுதுனவன் ஏட்டைக் கெடுத்தான்... படிச்சவன் பாட்டைக் கெடுத்தான்..!

By காமதேனு

“அய்யய்யோ... இவரு மைக்கப் புடிச்சிட்டாரா... சாமானியமா விட மாட்டாரே?” என்று மாணவர்களை எல்லாம் பதறிச்சிதற வைப்பார் எங்க உதவி தலைமை ஆசிரியர். அவரது பேச்சில் எத்தனைமுறை, ’என்றால் மிகையல்ல’ வருகிறது என்று எண்ணுவான் சிவா. எத்தனை முறை, ’இதைத்தான் திருவள்ளுவர்...’ என்று சொல்கிறார் என்று நான் எண்ணுவேன். இப்படி ஆறாம் வகுப்புப் படிக்கும்போதே எங்களை ஆராய்ச்சி(!) மாணவர்களாக்கிய பெருமை அவருக்குண்டு! 

அந்த ஆசானுக்கு மொத்தம் 32 திருக்குறள்கள்தான் தெரியும். எந்தத் தலைப்பில் பேசச் சொன்னாலும் அந்த 32 குறள்களையும் உள்ளே நுழைத்துவிடுவார் என்பதே எங்கள் ஆராய்ச்சி முடிவு. அவருக்கு நாங்கள் வைத்திருந்த பட்டப்பெயர், ’துப்பார்க்குத் துப்பாய தூவும் மழை’. தலைவன் பேசினால் முன்வரிசையில் உள்ள மாணவர்கள் எல்லாம் எச்சில் மழையில் நனைவது நிச்சயம் என்பதே காரணம். அம்புட்டுத் திருக்குறள் படிச்ச அந்த மகான், ‘அவை அறிதல்’ அதிகாரத்தையும் படிச்சிருந்தால், எங்கே, யார் மத்தியில், எப்படிப் பேச வேண்டும் என்பது தெரிஞ்சிருக்கும்... பாவம்!

அவரையும் மிஞ்சுவார் தலைமை ஆசிரியர். “மரம் தெரிகிறதா? தெரியலை சுவாமி. கிளை தெரிகிறதா? தெரியல சுவாமி. கிளி தெரிகிறதா? தெரியல சுவாமி. அப்ப என்னதான் தெரிகிறது? கிளியின் கழுத்து மட்டும் சுவாமி” என்று குருவின் கேள்விக்கு அர்ச்சுனன் பதில் சொல்லும் நீதிக்கதை இடம்பெறாத அவரது சொற்பொழிவு அரிதிதும் அரிது. அவர் “மரம் தெரிகிறதா?” என்று தொடங்கும்போதே, மாணவர்கள் எல்லாம் மீதி வரிகளை எல்லாம் பாட்டாகவே பாடிவிடுவோம். ஆனாலும், “ச்சே... இவங்களுக்குத் தெரிந்த விஷயத்தைத்தான் பேசுறோமா?” என்று உணரவே மாட்டார். எங்களோடு சேர்ந்து ரொம்பப் பெருமையாக ‘ரைம்ஸ்’ மாதிரி கூடவே பாடுவார். இடையிடையே கைத்தட்டி கலாட்டா செய்தாலும், அதைத் தன் பேச்சுக்குக் கிடைத்த அங்கீகாரமாக (தப்பாகப்) புரிந்துகொண்டு கூடுதலாக அரை மணி நேரம் பேசுவார்.

ஒருசில ஆசிரியப் பெருமக்கள் மாத்திரமல்ல... பொது வெளியிலும் தேய்ந்த ரெக்கார்டாக சொன்னதையே சொல்லும் புண்ணியவான்கள் பலர் இருக்கிறார்கள். நான் முதன்முதலில் கேட்ட அரசியல் கூட்டம் என்றால், அது தீப்பொறி ஆறுமுகத்தின் திமுக கூட்டம்தான். அது ஜெஜெ என்ற பெயரில் அரசுப் போக்குவரத்துக்கழகம் தொடங்கப்பட்டிருந்த காலம். “கட்டபொம்மன் பஸ் எல்லாம் ஏன் புளியமரத்துல மோதுது தெரியுமா? அவரை புளியமரத்துலதான தூக்குல போட்டாங்க... அந்தப் பாசம்” என்று சொல்லிவிட்டு, “இந்த பஸ்சுக்கு ஜெஜென்னு பேரு வெச்சாலும் வெச்சாங்க...” என்று ஆரம்பித்து எதையோ சொன்னார். கூட்டம் குபீரென்னு சிரித்தது. பொடியன் என்பதால் எனக்கு ஒரு எழவும் வௌங்கல. என்னைப் போல் முழித்தவர்களைப் பாத்து, “இவிங்கியளுக்கு வௌக்கம் சொல்லியே நான் ஓஞ்சு போனேன்” என்றார் தீப்பொறி. எனக்கு 28 வயதானபோது அவர் அதிமுக-வில் இருந்தார். அப்போது, 2ஜி பற்றியும், கனிமொழி பற்றியும் பேசியபோதும் இப்படித்தான் ஒரு டபுள் மீனிங் கமென்ட் அடித்தார். எல்லோருக்கும் புரிந்தது. ஆனாலும், “இவிங்கியளுக்கு வௌக்கம் சொல்லியே...” டயலாக்கை அவர் விடவேயில்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE