நிழற்சாலை

By காமதேனு

சில நேரங்களில் சில குறிப்புகள்

எண்ணெய் எவ்வளவு
அரிசி எவ்வளவு
என்று மட்டும்தான் குறிக்கப்படுகிறது
குடும்ப அட்டையில்
இரண்டே கால் மணிநேரம்
கால் கடுக்க வரிசையில் நின்று
வேர்த்து வழிந்து நனைந்து
பிசுப்பிசுப்போடு
ரேஷனில் பொருள் வாங்கினாள்
கடைசியாக நின்றவளுக்கும்
முன் நின்ற அவள்.
அரிசியை நிறுத்தவன்
இவளை அளந்துகொண்டே
மண்ணெண்ணெய் ஊற்றும்போது
சேர்ந்து வழிந்ததையெல்லாம்
குறிக்கப்படுவதே இல்லை.
- வலங்கைமான், நூர்தீன்

நீயற்ற மழை

நாம் சன்னலோரத்தில் அமர்ந்து
இதே மழையைப் பற்றித்தான்
பேசிக் கொண்டிருந்தோம்.
தூரத்தில் ஈரமாய் நின்ற மலையிடம்
இதே மழையைப் பற்றித்தான்
சொல்லிக் கொண்டிருந்தோம்.
இதே மழையைப் பற்றித்தான்
தூரம் குறுகிய நம் கண்களால்
அன்று வெகுநேரம்
பேசிக் கொண்டிருந்தோம்.
ஒரே ஒரு முத்தத்தைத்தான்
இதே மழையிடம் இருவரும்
கேட்டுக்கொண்டே இருந்தோம்.
இப்போது பெய்யுமிந்த மழை
உன் கண்களைக் கேட்கிறது
உன் முத்தங்களையும் கேட்கிறது!
- விளாமரத்துப்பட்டி, சௌவி

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE