‘சபலிஸ்ட்’கள் நடத்திய சமூக நாடகம்!

By காமதேனு

சமீபத்துல, ‘மேற்குத் தொடர்ச்சிமலை’ படம் பார்க்கப் போயிருந்தேன். படம் பார்த்து முடிச்சு வெளியே வந்த சிலபேரு, ஒருத்தர் கையப் பிடிச்சி பாராட்டுத் தெரிவிச்சாங்க. ஒரு படைப்பாளிக்கு பாராட்டுதானே உற்சாக டானிக்? அதனால பாராட்டியே ஆகணும்னு நானும் களமிறங்கிட்டேன்.

“சார், படத்துல வசனமும், உச்சரிப்பும் செம. அப்படியே தேனிப்பக்கம் ஒரு எட்டுப் போயிட்டு வந்த மாதிரி இருந்துச்சி. கதாபாத்திரத் தேர்வும், ஆடை வடிமைப்பும் அற்புதம் போங்க. யாருமே நடிக்கல, வாழ்ந்திருக்காக”ன்னு சத்தமாச் சொன்னேன். சுத்தியிருந்தவங்க எல்லாம் ஒரு மாதிரி பார்க்க ஆரம்பிக்க, “என்னடா இது, நாம எதுவும் தப்பாச் சொல்லிட்டோமா?”ன்னு யோசிச்சேன். அப்ப ஒரு பத்திரிகையாளரு, “தம்பி, அவரு படத்தோட கேமிராமேன். படத்தோட முழு பலமே அவர்தான். 

சிவனேன்னு போய்க்கிட்டு இருந்தவரைக் கூப்பிட்டு, ஒளிப்பதிவைத் தவிர மிச்சத்தைப் பூராம் பாராட்டுறீயே, உனக்கு எந்தவூரு ராசா?”ன்னாரு. விளக்கம் சொல்லியே ஆகணும்னு மறுபடியும் அவர்கிட்ட போய், “சாரி சார், நீங்க டைரக்டர்னு நினைச்சி பாராட்டிட்டேன்”னு சொன்னவன், கூமுட்டைத்தனமா, “ஒளிப்பதிவு அருமை”ங்கிற விஷயத்தைச் சொல்ல மறந்துட்டேன்.

இப்படித்தான் பத்திரிகை சம்பந்தமான விழா ஒன்றுக்கு ஒரு சினிமா இயக்குநரைக் கூப்பிட்டிருந்தாங்க. விமான நிலையத்தில் இருந்து அவரை அழைச்சிட்டுவர்ற பொறுப்பை போயும் போயும் என்கிட்ட ஒப்படைச்சாங்க. வரும்போது எதையாவது பேசணுமே என்று, “சார் உங்க படம் ஒண்ணுவிடாம பார்த்திருவேன். நான் மட்டுமில்ல, என் நண்பங்க, அண்ணன், அக்கா எல்லாத்துக்கும் உங்களப் பிடிக்கும். உங்கள பார்க்கிறதுக்குன்னே நண்பன் ஒருத்தன் விழாவுக்கு வர்றதாச் சொல்லியிருக்கான்”னு அடிச்சிவிட்டேன். விழா தொடங்கும் முன்பு, முன்வரிசையில் இயக்குநருடன் உட்கார்ந்து பேசிக்கிட்டு இருக்கும்போது, நண்பன் ஒருத்தன் வந்தான். “சார், நான் சொன்ன பையன் இவன்தான்”னு பொய் சொல்லிட்டு, அவனைப் பார்த்து, “என்னடா மாப்ள, நீயும் சினிமாவுல நடிக்கிறியா... டைரக்டர் சார்கிட்ட சொல்லி ‘பருத்திவீரன் லாரி டிரைவர்’ மாதிரி வெயிட்டான(!) ரோல் வாங்கிடலாம்”னு சொன்னேன். பயபுள்ள என்ன கோவத்துல இருந்தானோ, “போடா லூசு. இப்படிச் சொல்லித்தான் இந்த ஏமாந்த மனுஷன உன் பக்கத்துல உட்கார வெச்சிருக்கியா?”ன்னு டைரக்டரைப் பார்த்துச் சொல்லிட்டான்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE