ஹாலிவுட்டில் சமீப காலங்களில் சூப்பர் ஹீரோக்களின் படங்கள்தான் கல்லா கட்டுகின்றன. அங்குமட்டுமல்ல... உலகமெங்குமே இதே நிலைதான். சூப்பர் ஹீரோ படங்களைத்தான் ஊடகங்களும் கொண்டாடுகின்றன. ஆனால், நான்கு முறை ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்ட நடிகர் ஈதன் ஹாகே, சூப்பர் ஹீரோ படங்களைக் கிழித்துத் தொங்கவிட்டுள்ளார். நேர்காணல் ஒன்றில் சூப்பர் ஹீரோ படங்கள் பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர், “லோகன் படத்தை எல்லோரும் ‘கிரேட் மூவி’ என்றதால் அதைப் பார்க்க விரும்பினேன். ஆனால், வழக்கம்போல சூப்பர் ஹீரோ படங்களில் கதையும் இல்லை ஒன்றும் இல்லை என்பதை இதுவும் நிரூபித்துள்ளது. ஆனாலும் எல்லோரும் அதைப் பற்றியே பேசுகிறார்கள்” என்று கூறியிருக்கிறார். அவரது இந்தக் கருத்து ஹாலிவுட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ஹுக் ஜாக்மேன் உல்வரினாக நடித்த ‘லோகன்’ படம் திரைக்கதை பிரிவில் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டது. ஏற்கெனவே, பழம்பெரும் இயக்குநர் ரிட்லி ஸ்காட்டும், “சூப்பர் ஹீரோ படங்களில் கதையே இருப்பதில்லை” என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
நூலரங்கம்: புதியதாய் ஒரு முயற்சி
கவிதை உலகுக்கு அன்றாடம் நிறைய கவிஞர்கள் வந்தவண்ணம் உள்ளனர். அதில் புதிய வரவு பா. சண்முகம். ‘நெப்பந்தஸாக மாறுபவன்’ தொகுப்பின் பெரும்பாலான கவிதைகள் இருள் பூசிய வண்ணம் உள்ளன. அதை மீறி வெளிவரும் கவிதைகளில் படிமங்கள் மூலம் புது உலகத்தினை அறிமுகப்படுத்துகிறார் கவிதையாசிரியர். அப்படித்தான் ‘சைக்கிளில் தலைகீழாய் தொங்கும் கறிக்கடை கோழிகளின் தலைக்குக் கீழ் மற்றுமொரு பூமி இருக்கிறது’, ‘குருவியொன்றின் கூட்டிற்கு வெளிச்சம் தரும் மின்மினிப் பூச்சியின் வாழ்வியல்’ என்று தரிசனங்கள் கிடைக்கின்றன. தொகுப்பில் மிகப் பிரமாதமான கவிதைகளின் நடுவே கவிதையாகாத, எதுவுமே ஆகாத வெற்று வார்த்தைகளும் விரவிக் கிடக்கின்றன. எவற்றிலும் பிரசுரமாகாமல் நேரிடையாக தொகுப்பான பாதிப்பு அங்கங்கே தெரிகிறது.
சின்னச் சின்ன வார்த்தைகளில் அரசியல் பேசிப்போகிறார். ‘கடைசி தீக்குச்சியின் நெருப்பை சேமிக்க நினைத்த வழிப்போக்கன் வனாந்திரத்தை தீ மூட்டி சுள்ளிகளில் சேமிக்கிறான்’ என்பதில் இருவிதமான அரசியல் பேசிப்போகும் சண்முகத்துக்கு வாழ்த்துகள். அதே சமயம் வாழ்வு தனக்குத் தந்ததை அறிமுகப்படுத்துவதிலும் முத்திரை பதிக்கிறார். சித்தப்பா, பிரேதக் கிடங்கு கவிதைகள் நல்ல உதாரணம்.