பெண் ‘காமெடி’ எழுத்தாளர்களுக்குத் தனி விருது!

By காமதேனு

பெண் ‘காமெடி’ எழுத்தாளர்களுக்குத் தனி விருது!

இலக்கிய விருதுகளில் உயர்வாகக் கருதப்படும் புக்கர் பரிசிலும் சரி, ‘காமெடி’ எழுத்துக்கான பிரத்யேக விருதான ‘போலிங்கர் எவ்ரிமேன் வோட்ஹவுஸ்’ பரிசிலும் சரி பெண் எழுத்தாளர்களுக்கு விருது வழங்குவது மிகக் குறைவு.  இந்நிலையில், பெண் ‘காமெடி’ எழுத்தாளர்களை ஊக்குவிக்கவும் கவுரவப்படுத்தவும் ’காமெடி வுமன் இன் ப்ரின்ட்  பரிசு’ என்ற விருதை உருவாக்கியுள்ளார் நகைச்சுவை நடிகையும் எழுத்தாளருமான ஹெலன் லெட்ரர். “நான் என் எழுத்துக்காக விருது பெற வேண்டும் என்று விரும்பினேன். ஆனால், அதற்கு வாய்ப்பு இருப்பதாகவே தெரியவில்லை” என்று சொல்லும் ஹெலன் தன்னைப் போன்ற பெண் எழுத்தாளர்களுக்காகவே இந்த விருதை உருவாக்கியுள்ளேன் என்கிறார்.  அடுத்த ஆண்டிலிருந்து இந்த விருது வழங்கப்படவிருக்கிறது.

நூலரங்கம்: நிஜத்தன்மையின் வலி 

திரைப்படத்துறையில் இணை இயக்குநராகப் பணிபுரியும் அமீர் அப்பாஸின் கவிதைத் தொகுப்பு ‘இசைக்கும் நீரோக்கள்’ டிஸ்கவரி வெளியீடாக வந்திருக்கிறது. அமீர் அப்பாஸ் சமூக அரசியல் செயற்பாட்டாளர் என்பதாலோ என்னவோ, அவரின் மேடைப் பேச்சுகளில் இருக்கும் பிரச்சார தொனி பெரும்பாலான கவிதைகளிலும் தென்படுகிறது. முதலாளித்துவம், உலகமயமாக்கல் குறித்த கவிஞரின் பதிவுகளில் சமூக அக்கறை பளிச்சிடுகிறது. சமகால திரைத்துறை அரசியல் பேசும் ’மாய வலை’ போன்ற கவிதை மூலம் அமீர் அப்பாஸின் எண்ண ஓட்டத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. பாலச்சந்திரன்,பேரறிவாளன் போன்றவர்களை ஞாபகப்படுத்தும் கவிதைகள் அதன் நிஜத்தன்மையால் வலி பரப்புகிறது. குறிப்பாக, ’ஒரு மலையின் மெளனம்’ கவிதை . பொதுவாகக் கவிஞர்களுக்கு சொற் சிக்கனம் அவசியம் தேவை. அப்படியான பட்சத்தில் எல்லாவற்றையும் வெளிப்படையாக முன் வைக்கும் அமீர் அப்பாஸின் கவிதைகள் சில இடங்களில் கவிதா தரிசனத்தை முன் வைக்கிறது என்பதை மறுக்க முடியாததுதான்.  ஈழம் சம்பந்தப்பட்ட கவிதைகளில் பாராட்டுதல்கள் பெறுகிறார் கவிஞர். தொகுப்பின் சுவாரஸ்யமாக கலாப்ரியாவின் முன்னுரையைக் குறிப்பிடலாம்.    

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE