ஒரு கோழியின் காதல்

By காமதேனு

அழகு ஒவ்வொரு வாட்டி மாமியார் ஊருக்குப் போகும்போதும் கோழிகளில் ரெண்டு ‘கறி’க் குழம்பாகிவிடும். முதல் தடவையா கோழிக்குஞ்சு ரெண்டு குறைஞ்சு போச்சு. காரணம், அழகின் மகன் அறிவு. “இந்தக் கோழிக்குஞ்சுகள நான் வளக்கப்போறேன்”னு பாட்டிக்கிட்ட அடம்பிடிச்சி வாங்கிட்டு வந்துட்டான். 

கழுத்தை முன்னும் பின்னும் நீட்டி நீட்டி, டைனோஸர் போல பேலன்ஸ் செய்து நடந்ததால ஒரு கோழிக்குஞ்சுக்கு ‘டைனோ’ன்னு பேரு வெச்சான். இன்னொரு கோழிக்குஞ்சுக்கு என்ன பெயர் வெக்கலாம் என்று அப்பனைக் கேட்க, “உனக்குத் தங்கச்சிப் பாப்பா பெறந்தா அமோகான்னு பேரு வெக்கணும்னு ஆசைப்பட்டேன்”னாரு அவரு. “சூப்பர்பா... எங்க ஸ்கூல்லேயும் அமோகான்னு ஒரு பொண்ணு யுகேஜி படிக்குது” என்று கண்கள் படபடக்கச் சொன்னான் அறிவு.

ஆடு மேய்க்கிறவங்களப் பார்த்திருப்பீங்க, மாடு மேய்க்கிறவங்களப் பார்த்திருப்பீங்க, பன்னி மேய்க்கிறவங்களக் கூடப் பார்த்திருப்பீங்க. ஆனா, கோழி மேய்க்கிறவனைப் பார்த்திருக்கீங்களா? அறிவு மேய்ச்சான். காதலியைப் பின்தொடர்கிற வெட்டிப்பய மாதிரி, காரணமே இல்லாம அது பின்னாடியே திரிஞ்சான். 

பூனைக்குட்டி, கிளி மாதிரி மடியில் தூக்கி வெச்சு கொஞ்சுனான். மொத்தத்துல அதை ஒரு கோழியா வளர்க்கல.‘கிக்கி கிக்கி’ என்று கத்திக்கொண்டிருந்த கோழிக்குஞ்சுகளின் குரல் ஒரு நாள், ‘கொக் கொக்’ என்று முதிர்ச்சியடைந்தது. “ஏம்பா... நம்ம கோழிக்கு சளிபிடிச்சிடுச்சா?” என்று கேட்ட அறிவிடம், “இல்லடா மகனே... அது வயசுக்கு வந்திருச்சி. இனிமே முட்டைபோடும்” என்றான் அழகு. “அய்... அப்ப நிறைய கோழிக்குஞ்சு வரும்ல” என்று குதித்தான் அறிவு. அழகின் மனைவியோ, முட்டைகளைப் பொறுக்கி வீட்டில் அடுக்குவது போலவும், அதை விற்று கார் வாங்குவது போலும் பகல் கனவு காண ஆரம்பித்துவிட்டாள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE