சில வார்த்தைகளும் மொழிபெயர்ப்பாளரும்

By காமதேனு

தமிழில் மிகச் சரியாக அடையாளப்படுத்தாத மொழிபெயர்ப்பாளராக ஆர். சிவகுமாரைச் சொல்லலாம். நாற்பது ஆண்டுகளாக இலக்கிய உலகில் இயங்கி வந்தாலும், எழுதியவை சொற்பமே. இருந்தும் அனைத்தும் கவனம் கொள்ளத்தக்கவை. அவரின் மொழிபெயர்ப்பு குறித்தான பார்வைகளை இன்றைய இளம் படைப்பாளிகள் மூலமாகத் தொகுத்து ‘மொழிகளின் உருமாற்றம்’ என்ற பெயரில் தக்கை பதிப்பகம் புத்தகம் வெளியிட்டிருக்கிறது.

எவ்வித எதிர்பார்ப்புமின்றி தமிழ் இலக்கியத்துக்கு ஆர். சிவகுமார் செய்த பங்களிப்பினை அனைவரும் அறியும் வண்ணம் வெளியிட்டமைக்கு தக்கை பதிப்பகத்துக்கு வாழ்த்துகள். அடர்த்தியான அணிந்துரை தந்திருக்கும் கவிஞர் சுகுமாரனையும் சேர்த்து மொத்தம் ஏழு ஆளுமைகள் மொழிபெயர்ப்பாளரின் படைப்புகள் குறித்து தங்கள் பார்வையைத் தந்திருக்கிறார்கள். ஆர். சிவகுமாரின் சமீபத்திய தொகுப்பான ‘ இரண்டு வார்த்தைகளும் மூன்று துறவிகளும்’ நூலை முன்வைத்து கார்த்திகைப் பாண்டியன் தந்திருக்கும் சற்றே நீளமான கட்டுரை அகம், அரசியல், தத்துவம் என்று மிக விரிவான வாசிப்பைக் கோருகிறது. அதேபோல் குணா கந்தசாமியின் பார்வை பொதுவான மொழிபெயர்ப்பின் அபத்தத்தை வரிக்கு வரி விளக்கி வாசகரைச் சிந்திக்க வைக்கிறது.

சோஃபியின் உலகம் நாவல் குறித்துத் தன் பார்வையைத் தந்திருக்கும் கே. என். செந்தில் தனது வாழ்வியல் அனுபங்கள் ஊடாக நாவலை அணுகியிருப்பது சுவாரஸ்யம் கூட்டுகிறது. ஆர். சிவகுமாரின் படைப்புகள் குறித்து மட்டுமல்லாமல், பொதுவான மொழிபெயர்ப்பு குறித்து தனது விசாலமான வாசிப்பனுபவத்தைத் தந்திருக்கும் சபரிநாதனின் கட்டுரையும் கவனிக்கத்தக்கது. விமர்சனம் எவ்வாறு தன்னை நவவிமர்சனம் எனப் பெயரிட்டுக்கொண்டது என்ற விளக்கம் நன்று. மேலும் மனோ. மோகன், பெருந்தேவி போன்றோரும் தங்களது சிறப்பான பார்வையைத் தந்திருக்கிறார்கள்.

மொழிபெயர்ப்பு என்பது எப்போதும் எழுத்திலிருந்து நம்மை அன்னியப்படுத்தும் ஒன்று. ஆனால், மொழிபெயர்ப்பாளர் ஆர். சிவகுமாரின் பங்களிப்பு பற்றிய இத்தொகுப்பை வாசிக்கையில், அவருடைய மொழிபெயர்ப்புகள் மட்டுமல்லாது பிற மொழிபெயர்ப்புகளையும் தேடி வாசிக்கத் தோன்றுகிறது. அதுவே இந்நூலின் வெற்றி எனலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE