அந்த கத்திக்கு மட்டும் வாயிருந்தா..!

By காமதேனு

சலூன் கடை ரோலிங் சேர்ல இருந்தப்ப தோணுன கட்டுரை(?!) இது. காரணம், வழக்கம்போல கடைக்காரர், ஒரு பக்கக் கிருதாவை நீளமாவும், இன்னொரு பக்கத்தை குட்டையாவும் வெச்சிட்டார். அதை சரி பண்ணச் சொன்னப்ப, இந்தப் பக்கம் குட்டையாகி, அந்தப் பக்கம் நீண்டுடிச்சி. இன்னைக்கி நேத்து இல்ல... எனக்கு நெனவு தெரிஞ்ச நாளா இந்த அக்கப்போரு தொடருது!

எங்க ஊர்ல ராமகிட்ணன்னு (ராமகிருஷ்ணன்) முடிதிருத்தும் தொழிலாளி இருந்தாரு. அவரோட வீட்டு வாசல்தான் சலூன். கல் தூணும், வேப்பமரமும்தான் எங்களுக்கு நாற்காலி. எங்கே நிழல் விழுதோ அங்க உட்கார வெச்சி, தூண்/வேப்ப மரத்துல தலையை முட்டராப்ல வெச்சிக்கிட்டு ஆடாம அசையாம உட்காரணும். பின்னால இருந்து அவர், முடியை வெட்டுவார். பெரியவங்களுக்கு மட்டும் சிறப்புச் சலுகையா, கையில ஒரு கண்ணாடியைக் கொடுப்பார். உள்ளங்கை அளவுல இருக்கிற, ரசம் போன அந்தக் கண்ணாடியை எந்தக் கோணத்துல வெச்சிப் பார்த்தாலும் பின்னாலிருந்து ராமகிட்ணன் என்ன செய்றார்ங்கிறதைக் கண்டுபிடிக்கவே முடியாது. 

வேப்பமரக்காத்தா, இல்ல அவர் தெளிக்கிற அழுக்குத்தண்ணியோட மகிமையான்னு தெரியாது. தலையில தெளிச்ச அடுத்த நிமிஷமே மயக்க மருந்து மாதிரி வேலை செஞ்சி, நம்மளத் தூங்க வெச்சிடும்.

தலைவன், விடியக் காலையிலேயே மிதமா சரக்குப் போட்டுட்டுத்தான் தொழிலையே ஆரம்பிப்பாரு. கேட்டா, “இல்லாட்டா கை நடுங்கும் பரவால்லையா?”ன்னு லேசா பயமுறுத்துவார். அதுவே அந்தியில (சாயுங்காலம்) போனால், நிறைபோதையில் மிதப்பார். “முடி வெட்டலாம்னு வந்தேன்...” என்று நாம் சொல்லி முடிப்பதற்குள், “தலைய கழட்டி ஓரமா வெச்சிட்டுப் போரும்... செத்தோடம் கழிச்சி வெட்டி வெச்சிருக்கேன்” என்று அசால்டாய் சொல்வார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE