வீடற்றவர்களின் பார்வையில் உலகம்

By காமதேனு

மத்திய இங்கிலாந்தில் உள்ள நோட்டிங்காம் நகரத்தில் வசிக்கும் 22 வயதான க்ரீன்ஹால்க் ஒரு வித்தியாசமான முயற்சியை எடுத்துள்ளார். பொதுவாகப் புகைப்படக்காரர்களுக்கு ‘ஸ்ட்ரீட் போட்டோகிராஃபி’ ஒரு ஹாபியாகவே இருக்கும். அவர்களின் தேடலில் நிச்சயம் வீடற்றவர்கள், ஆதரவற்றவர்கள் இடம்பெறுவார்கள். ஆனால், வீடற்றவர்களும் ஆதரவற்றவர்களும் புகைப்படக்காரர்களானால் எதைப் படம் பிடிப்பார்கள் என்ற யோசனையில் உதயமாகியிருக்கிறது ‘Stories of the Streets’. இதற்காக, தெருக்களில் வாழ்பவர்களை புகைப்படக்காரர்களாக மாற்றியுள்ளார் க்ரீன் ஹால்க். அவர்கள் எடுத்த புகைப்படங்களை வைத்து ‘Stories of the Streets’ என்ற தலைப்பில் கண்காட்சியும் நடத்திவருகிறார். “இந்த உலகத்தை ஆதரவற்றவர்களும், வீடற்றவர்களும் பார்க்கும் விதமே வேறு மாதிரியாய் இருக்கிறது. அதன் மூலம் அவர்களுடைய மனநிலையைப் பிரதிபலிக்க முடிகிறது” என்கிறார் க்ரீன்ஹால்க்.

ருசிக்க வைக்கும் கதைகள்

‘பாலசந்திரன் என்றொரு பெயரும் எனக்கு உண்டு’ என்ற சிறுகதைத் தொகுப்பின் மூலம் கவனத்துக்கு வந்த புலியூர் முருகேசனின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு இது. புலியூர் முருகேசனின் கதைகளின் பெரும் பலமே அவர் தன் எழுத்து வழி முன்வைக்கும் அரசியலே. தொகுப்பின் முதல் கதையிலிருந்தே அச்செயலைக் காத்திரமாகவே துவங்குகிறார். யதார்த்த பாணி நடையில் சற்றே விலகி அனைத்துக் கதைகளும் எழுதப்பட்டிருந்தாலும், அத்தனையிலும் ஊடுருவி நிற்கும் சமூக அரசியல் பித்தலாட்டங்கள், சாதி வெறி எல்லாம் நாம் அன்றாடம் கண்டு கேட்டு அறிந்தவையே.

தலைப்புக் கதையான ‘மக்காச்சோளக் கணவாய்’ தற்போதைய அரசின் செயல்பாடுகளை ஒரு கற்பனையான நகரத்தை நிர்மாணித்து விமர்சித்திருந்தாலும், அப்பட்டமாகவே வெளிப்படுத்துகிறது. காலம் கடந்து விமர்சிக்கப்படும்போது இந்த அரசு விமர்சனக் கதை பெரிதும் பேசப்படும். வித்தியாசமான கதை சொல்லலில் விரியும் ‘கருந்துளையின் இரண்டு வழிகள்’ கதை, சாதி வன்மத்தை அதன் வெப்பம் குறையாமல் பேசுகிறது. கதையின் முடிவில் கூறப்படும் விளக்கம் இல்லாவிட்டாலும், எதற்காகக் கதைநாயகன் இறந்தான் என்பது வாசகருக்குப் புரியும். மாய யதார்த்த பாணியில் பின்னப்பட்டிருக்கும் ‘உறைகடல் ஆகுதல்’ கதை மிகச் சிறப்பு. கனவுக்குள் நிகழும் கனவில் விரியும் கதை போலவே பெரும்பாலான கதைகள் தன் அகத்தைக் கொண்டிருக்கின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE