ஒரு கடலை மிட்டாய்க்கு கலவரமாய்யா?!

By காமதேனு

சின்ன வயசுல படம் பார்த்ததை அசைபோட்டுப் பாத்தா, கூடவே முறுக்கு, முட்டை போண்டா தின்னதெல்லாம் ஞாபகத்துக்கு வரும். அதுவும் தீபாவளிக்கு ரிலீஸான படத்தை, தீபாவளி பலகாரங்களோடு பார்த்தவங்க நாம. இதுக்காகவே வீட்ல அப்பா அம்மா பெஞ்ச் டிக்கெட் எடுத்திருந்தாலும், குட்டிப்பசங்க எல்லாம் தரை டிக்கெட்டுக்குப் போயிடுவோம். அந்த ஏரியாவுல சின்னப்பசங்களோட ஆதிக்கம் கொடி கட்டிப் பறக்கும். நம்ம ஃப்ரெண்ட்ஸ் பெரும்பாலும் அங்கதான் உட்கார்ந்திருப்பாங்க. எப்பவுமே நம்ம வீட்டுப் பலகாரத்தைவிட பக்கத்து வீட்டுப் பலகாரம்தானே ருசிக்கும்! பங்கு போட்டுச் சாப்பிடுவோம். அதுவே பொங்கல் நேரம்னா, கூடை நிறைய கரும்புகளை வெட்டிக்கொண்டுபோய், யானை மாதிரி கரும்பை துவம்சம் பண்ணுவோம். ஒவ்வொருத்தன் காலுக்கடியிலும் மலை மாதிரி கரும்புச் சக்கை குவிஞ்சிடும்.

இப்ப அதெல்லாம் பெருங்கனவு. தியேட்டருக்குள்ள ஒரே ஒரு பிஸ்கெட் பாக்கெட்டைக் கொண்டுபோயிட்டாலே, அந்த ஆளுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது குடுக்கலாம். தியேட்டருக்குப் படம் பார்க்கப் போற ஆட்களை தீவிரவாதி மாதிரி, மெட்டல் டிடெக்டர் எல்லாம் வெச்சி துலாவுறாங்க. அதுமட்டுமா, பேன்ட் பாக்கெட்டுக்குள்ள எல்லாம் கையைவிட்டுத் தேடுறாங்க. பெண்களோட ஹேண்ட் பேக்குல பதுக்கிவெச்சி கொண்டுபோயிடலாம்னு பாத்தா, அதுக்குன்னே தனியா மகிளா படையும் காத்திருக்குது.

வெளியில இருந்து சுகாதாரமில்லாத உணவுப்பண்டங்களைக் கொண்டுவந்து சாப்பிட்டு உடம்புக்குக் கிடம்புக்கு ஏதாவது ஆயிடக்கூடாதேங்கிற அக்கறையில இது நடந்தா பாராட்டலாம். எங்க... இவனுங்க தியேட்டர் கேன்டீன்ல கொள்ளைக்காசுக்கு விற்குற பொருளை வாங்காமப் போயிட்டா... என்ற ‘தொழில் பக்தி’யிலதான் இவ்வளவு கெடுபிடி. “சரிங்கய்யா, பாப்கார்ன், பீட்ஸா, சமோசா, பிரெஞ்ச் ஃப்ரை, நாச்சோஸ் சிப்ஸ் கோலா இதுதான் தமிழர்களோட பாரம்பரிய உணவா? விற்கிறதுதான் விற்கிற... ஆமை வடை, கை முறுக்கு, முட்டை போண்டா, காளிமார்க் கலர், மாப்பிள்ளை விநாயகர் பன்னீர் சோடா எல்லாம் சேர்த்து விற்க வேண்டியதுதானே... நீ விற்கிறத மட்டும்தான் வாங்கணும், அதுவும் நீ சொல்ற விலைக்குத்தான் வாங்கணும்னு சொன்னா என்ன அநியாயம்யா?” அப்படின்னு பன்ச் டயலாக் பேச ஆசைதான். ஆனா, ஜிம் பாய்ஸை வெச்சி பதம் பாத்துருவாங்களேன்னு பயம்.

அதுமட்டுமா, குடிக்கிறதுக்கு ஒரு பாத்திரத்துல தண்ணியை வெச்சி, ஒரு தம்ளரை இரும்புச் சங்கிலியால கட்டிப்போடுறதுதானே உலக வழக்கம்? ஆனா, இவங்க அரைக்கேன் மினரல் வாட்டரை மட்டும் வெக்கிறாங்க. முந்துனவனுக்கு மட்டும்தான் ஓசி தண்ணி. மிச்சப்பேரு எல்லாம் கேன்டீன்ல வாங்கித்தான் குடிச்சாகணும். அட அதையாவது நியாயமான விலையில விற்கிறாங்களா? ஒரு லிட்டர் குடிதண்ணியை கோயம்பேடு பஸ் ஸ்டாண்டிலேயே 10 ரூபாய்க்கு வாங்கிரலாம். ஆனா, தியேட்டர்காரங்க மட்டும் அதை 30 ரூபாய்க்கு விற்பாங்க.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE