கொடுத்த கடனைத் திரும்பக் கேடகிறாங்க... வாடகை பாக்கிய வசூலிக்கப் பார்க்கிறாங்க...- ‘பிக் பாஸ்’ வீட்டுக்குள் லதா ரஜினிகாந்த்!

By காமதேனு

‘அரசியல் பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் மூன்றாவது வாரம் இது. போட்டியாளரே அல்லாத ஆளுநர், ‘பிக் பாஸ்’ வீட்டுக்குள் ஆய்வும், அதிகாரமும் செய்வதைக் கண்டித்துப் போராட்டம் அறிவித்தார் அல்லவா ஸ்டாலின்? இந்தப் பிரச்சினையால் நிறைய பேர் நாமினேஷன் செய்து, ஆளுநர் வெளியேற்றப்படும் நிலை ஏற்பட்டது. ‘பிரச்சினை’ இல்லையென்றால் நிகழ்ச்சி கலை கட்டாதே? எனவே, ‘அவரை’ தக்கவைத்துக்கொள்ளும்விதமாகப் புதிய பிரச்சினையை ஏற்படுத்துகிறார் பிக்பாஸ்.

நாள் 15 காலை 7.30 மணி

`ஒருவன் ஒருவன் முதலாளி... உலகில் மற்றவன் தொழிலாளி...’ பாடலுடன் பொழுது விடிந்ததுமே, ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. சமையலுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் மாயமாகியிருந்தன. காஸ் இணைப்புகூட துண்டிக்கப்பட்டிருந்தது. தேவையான பொருட்களை ‘பிக் பாஸ்’ சந்தையில் போய் வாங்கிக்கொள்ளும்படி, ‘டாஸ்க்’ கொடுக்கப்பட்டது. ஆண்கள் அணியில் திருமாவும், இரா.முத்தரசனும், பெண்கள் அணியில் தமிழிசையும், குஷ்பும் தேர்வானார்கள்.

சந்தைக்குப் போனதும், “முதல்ல காஸ் இணைப்பு வாங்கிடுவோம் தோழர்” என்று முத்தரசன் சொல்ல, “ஆதார் இருக்குதா?” என்று கேட்கிறார் கடைக்காரர். “இருக்கு சார்” என்று திருமா சொல்ல, “காஸ் 500 ரூபாய்தான். ஆனா, 830 ரூபா குடுங்க. மீதியை உங்க பேங்க் அக்கவுன்ட்ல போட்டுருவோம்” என்றார்கள். “என்னய்யா இது... அநியாயமா இருக்குது” என்று ஆரம்பித்து ஆளுங்கட்சியின் எதேச்சதிகாரம், சந்தைப் பொருளாதாரம் என்று நிறைய முழங்குகிறார்கள் இருவரும். கடைசியில், தொண்டை வறண்டுபோய், “வாங்க தோழர் டீ குடிப்போம்” என்று போனால், சந்தையில் ஒரு டீக்கடையைக்கூட காணவில்லை. “தி காபி பீன் அண்ட் டீ லீஃப்” என்ற அகில உலக ஃபேமஸ் காபி கடைதான் இருக்கிறது. “இது இந்தியாவா இல்ல அமெரிக்காவா” என்று குழப்பமடைகிறார்கள் இருவரும். உள்ளே போய் ஒரு டீயும், பன்ரொட்டியும் ஆர்டர் பண்ணுகிறார்கள். 600 ரூபாய் பில் வருகிறது. “இதுக்கே பாதிக்காசு போச்சே? சிக்கன் வாங்க கேஎஃப்சிக்கும், பீட்ஸா வாங்க டோமினோஸ்க்கும் போனால் என்னாகும்?” என்று அரண்டுபோய் நிற்கிறார்கள். ஒரு வழியாக ரிலையன்ஸ் ப்ரஷ் காய்கறிக்கடைக்குப் போய், தக்காளி, கத்தரி, வெண்டை வாங்கிக்கொண்டு வீடு வந்து சேர்கிறார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE