சுவாரஸ்யக் கதைகளும் இடையூறான மொழிபெயர்ப்பும்

By காமதேனு

தொழில்முறை புகைப்படக் கலைஞரான பிரபு காளிதாஸின் மூன்றாவது புத்தகம் ‘நதியின் மூன்றாவது கரை’. கட்டுரை, நாவலுக்குப் பிறகு லத்தீன் அமெரிக்கச் சிறுகதைகளை மொழிபெயர்த்திருக்கிறார். அயல்மொழிக் கதைகளை மொழிபெயர்க்கும்போது, அந்நிலத்தின் இயல்பினை நம் கலாச்சாரத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும் சிக்கல் நேரிடும். ஆனால், எம். எஸ். மொழிபெயர்த்த ஆண்டன் செகாவ் கதைகளில் இச்சிக்கல் நேராதபடி பிரமாதப்படுத்தியிருப்பார்.

முதல் முயற்சி என்பதால், ஏழு கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்துள்ளார் மொழிபெயர்ப்பாளர். இந்தக் கதைகள் அனைத்தும், சிறுகதைகளுக்கான பொது இலக்கணத்தை உடைக்கும் கதைகளாக உள்ளன. குற்ற உணர்வு என்பது எந்தத் தேசம் சென்றாலும், மனிதர்களுக்குப் பொதுவான உணர்வு போலும். பெரும்பாலான கதைகளின் மனிதர்கள் அவ்வாறே தென்படுகிறார்கள். தொகுப்பில் தனித்துத் தெரியும் ‘நுரை மட்டுமே போதும்’ கதை, ஒரு அதிகாரிக்கும் போராளிக்கும் இடையிலான எண்ண ஓட்டத்தின் பிரதிபலிப்பு. மனிதத்தின் அசல் தன்மையை வரிக்கு வரி படபடப்புடன் கடத்தியிருப்பது பிரமாதம். ஒருவித அமானுஷ்யத்தன்மையுடன் கவிதை நடையில் நகரும் ‘நதியின் மூன்றாவது கரை’யின் முடிவும் அதிர வைக்கிறது.

இத்தொகுப்பின் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் வெவ்வேறு உணர்வைத் தோற்றுவிக்கும் வகையில் அமைந்திருக்க, மொழிபெயர்ப்போ கதை வாசிப்புக்கு இடையூறு தருவதாகவே உள்ளது. மூலத்தில் இப்படித்தான் சொற்கள் இடம் பெற்றிருக்குமா எனும் சந்தேகம் தோன்றுவது தொகுப்பின் மிகப்பெரிய பலவீனம்.

‘குரூரமும் வசீகரமும் அதில் இருந்தது. நிச்சயம் வசீகரமாகத்தான் இருந்தது’ என்பதன் மூலம் என்ன சொல்ல வருகிறார், இதன் அர்த்தம் என்ன, இதை எவ்வாறு புரிந்துகொள்வது? போன்ற சிக்கல்கள் தோன்றுவது கதை வாசிப்புக்கு நல்லதல்ல. இத்தொகுப்பில் அந்த ஆபத்து அதிகம் நிகழ்ந்திருக்கிறது. வரிக்கு வரி மொழிபெயர்ப்பு செய்வதுதான் ஒரு சிறுகதைக்குச் செய்யும் நியாயமா என்றும் கேள்வி எழுகிறது. ‘ஒளி ஊடுருவக்கூடிய அவளின் மெல்லிய இருண்ட உடைதான்’ என்ற வரியில் ‘இருண்ட உடை’ என்று எதைக் குறிப்பிடுகிறார்? ஆடையின் நிறத்தையா, அணிந்திருக்கும் நேரத்தையா?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE