தமிழ்ச் சிறுகதையுலகில் நம்பிக்கை ஊட்டும் புதுவரவு லைலா எக்ஸ். அவரின் முதல் தொகுப்பான ‘பிரதியின் நிர்வாணம்’ அதற்குக் கட்டியம் கூறுகிறது. தொகுப்பின் முதல் கதையிலேயே பல அதிர்ச்சி மதிப்பீடுகளை உடைத்துக் கடக்கிறார். எல்லாக் கதைகளிலும் அவர் செயல்படுத்தும் தத்துவ விசாரணைகள் புதிது. வெவ்வேறு விதமான பெண்கள், பல தளங்களில் வெவ்வேறு விதமான வாழ்வைக் கூறிச் செல்கிறார்கள். அநேகமாக எல்லாக் கதைகளிலுமே அடிநாதமாக உடல் இச்சை என்பது மெல்லிய கோடென வருகிறது. அது சில இடங்களில் இயல்பாகவும் சில இடங்களில் விநோதமாகவும் நிகழ்கிறது. விநோதம் என்பதும் வாழ்க்கையில் நிகழாததில்லையே!
தொகுப்பின் சிறந்த கதையாக ‘ஜெர்சி கனவுகள்’ கதையைச் சொல்லலாம். மூன்று கதாபாத்திரங்கள்; ஒரு விளையாட்டுக் களம் என எளிமையான இடத்தில் உணர்வுகளின் விளையாட்டு நிகழ்கிறது.சொல்லவந்ததை எவ்விதப் பூச்சுகளுமின்றி பளிச்சென்ற வார்த்தை நடையில் நகரும் ‘பிரதியின் நிர்வாணம்’ கதை அழகியல் சுமந்து கடக்கிறது. கதா, நினைவி எனக் கதாபாத்திரங்களின் பெயர்களிலேயே கதையை முன்னிறுத்தும் ‘சூனியக்காரன்களின் கதை’ எழுத்து நடையில் வித்தியாசம் காட்டுகிறது. ‘வலது காதல் இடது காதலி’ கதையின் ஆரம்பத்தில் எஸ்தரைப் பற்றிச் சொல்லிவிட்டுப் போகப்போக வாசகனின் மனநிலையை உத்தேசித்து, அதையும் கதாசிரியரே உணர்த்துவது ஆச்சரியப்பட வைக்கும் கதைசொல்லல். பெண்ணுடல் குறித்துப் பேசப்பட இங்கு இன்னும் நிறையவே இருக்கிறது என்பதைத்தான் அழுத்தமாகச் சொல்கிறது சிறுகதைத் தொகுப்பு.
‘கனகாவின் மென்பொருள் மேம்படுத்தப்பட்டது’ கதையில் கதாபாத்திரத்தின் எண்ணத்தில், கதாசிரியரின் கருத்துகள் உள்ளே நுழைவது குழப்பமூட்டுகிறது. லெட்சுமியாக மாறும் கனகாவின் கதாபாத்திரமும், முன்னுக்குப் பின் முரணாகவே வார்க்கப்பட்டிருக்கிறது. லைலா எக்ஸ் எவ்விடத்திலும் தெரியாமல், தொகுப்பில் மற்ற கதைகளுடன் ஒட்டாமல் தனித்துத் தெரியும் ‘முத்தி’ கதை ஒரு திருஷ்டிப்பொட்டு. பெரும்பாலான கதைகளில் வரும் உடல் தேடல், சுய இன்ப வேட்கை போகப்போக சலிப்பூட்டவும் செய்கிறது.
பெண்களின் உலகம், அதிலும் உடல் சார்ந்த பார்வைகளை அழுந்தப் பதிவதன் மூலம் கவனத்துக்கு வருகிறார் லைலா எக்ஸ்.