’கல்லெறி’ அழகும் ’கருணாமூர்த்தி’ மனைவியும்...!

By காமதேனு

தெருக் கோழிகள் “அய்யய்யோ... அம்மம்மோ...” என்று அலறிக்கொண்டு, றெக்கை ரெண்டையும் வயிற்றில் அடித்துக்கொண்டு ஓடுகின்றன என்றால், கள்ளப்பிராந்து (பருந்து) வருவதாக அர்த்தமில்லை. என் நண்பன் அழகு வருகிறான் என்று பொருள். கண்ணில்படுகிற உயிரினங்களை எல்லாம் கல்லால் எறிந்து துன்புறுத்திக்கொண்டே தான் ஏரியாவுக்குள் என்டர் ஆவான். அவனைத் தெருக்கிழவிகள் அந்தக் கிழி கிழிப்பார்கள். அதைப்பற்றி எல்லாம் துளியும் கவலைப்படாமல், ‘மெஷின் கன்’ போல கற்களை வீசிக்கொண்டே வருவான்!

அவன் கொன்ற ஓணான்களைக் கணக்கிட்டால், கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவில் வேட்டையாடப்பட்ட புலிகள், ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்களின் மொத்த எண்ணிக்கையைத் தாண்டிவிடும். ஒரே எறியில் கொல்வது, சுருங்காங்கண்ணி போட்டுப் பிடித்துக்கொல்வது என்று பல வித்தைகளைக் கைவசம் வைத்திருப்பான். வேடிக்கை பார்க்கப் பெண் பிள்ளைகள் வந்துவிட்டால்போதும், “இப்ப ஓணானைப் பேயாட வைக்கட்டுமா..?” என்று அதன் முகத்தில் மூக்குப்பொடியைப் போடுவது, கள்ளிப்பாலை ஊற்றுவது என்று ‘காளக்கேய’ தளபதி போல் கொடூரனாகிவிடுவான். யாராவது தடுத்தால், “ஏலே காட்டுக்குள்ள ஒரு வாட்டி ராமர் நடந்துபோனாரு. அவர் தண்ணி கேட்டப்ப, ஓணான் ஒண்ணுக்கு இருந்து குடுத்துச்சி...” என்று அதன் பாவங்களைப் பட்டியலிடுவான். நம்பாமல் பார்க்கும் எஸ்தரிடம், “ஏபிள்ள.. உங்க ஏசப்பாவுக்கும் இது மோண்டு குடுத்திருக்கு தெரியுமா?” என்று கேட்டு, மத நல்லிணக்கத்தை ஏற்படுத்துவான்.

வீட்டுத்தோட்டத்தில் ஒரே ஒரு இலையைக் கடித்துவிட்ட ஆட்டை, கொலைவெறி யோடு பழிவாங்கப் புறப்பட்டுவிடுவான். கடித்த ஆடு தப்பிவிட்டால், சினிமா வில்லன் போல அதன் காதலி, பிள்ளைகளைப் பிடித்துக்கொண்டுவந்து துன்புறுத்துவான். நாய்கள் எல்லாம் அய்யோ பாவம். தெருவில் நேர்க்கோட்டில் ஓடிக்கொண்டிருக்கும் நாய்கூட அவன் வீட்டருகே மட்டும் விலகி ஓடும். அவனைப் பார்த்துவிட்டால் கல்லெறி பட்டது போல அனிச்சையாகவே கத்திக்கொண்டு ஓடும். அதுவும் ‘காதலித்துக்’ கொண்டிருக்கிற நாயைக் கல்லால் அடிப்பதில் அவனுக்கு அப்படியொரு ஆனந்தம்!

கல்லூரியில், ‘பேர்டு வாட்சிங்’ என்றொரு நிகழ்வு நடந்தது. பறவை ஆர்வலர் ஒருவர், இந்தந்தப் பறவைகளுக்கு இதெல்லாம் சிறப்பு, அதன் வாழ்க்கை முறை இப்படி என்று சொல்லிக் கொடுத்துக்கொண்டிருந்தார். குறுக்கே புகுந்த அழகு, “இந்தா இருக்கே, இதுதான் தரைக்குருவி. ஒரு மாட்டு முடியும், ஈசலும் போதும், இதைப் பிடிச்சிடலாம். கறி இத்துனூண்டுதான் இருக்கும். ஆனா, தேனாட்டம் ருசிக்கும்” என்று அவன் சொல்ல, கடுப்பாகிவிட்டார் பறவை ஆர்வலர். “ஏலே முட்டாப்பய மவனே, நான் பறவைகளை எப்படிப் பாதுகாக்கிறதுன்னு சொல்லிக்குடுத்தா, நீ எப்படி சூட்டாம் போடுறதுன்னா சொல்லுத...” என்று எக்கு எக்கென்று எக்கிவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE