பிம்பிலிக்கா பிக்னிக்….

By காமதேனு

தியேட்டர் இன்டர்வெல்ல பாப்கார்ன் வாங்கிக் கொடுக்காதவனும், கோடை விடுமுறையில குடும்பத்தை பிக்னிக் கூட்டிக்கிட்டுப் போகாதவனும் நிம்மதியா இருந்ததா சரித்திரமில்ல. பிள்ளைங்களும், பொண்டாட்டியும், “நீ இந்த பூமியில பிறந்ததே வேஸ்ட்”ன்னு சர்ட்டிஃபிகேட் கொடுத்திடுவாங்க!

எங்கே போனோம், என்ன பார்த்தோம்ங்கிறதவிட, எப்படிப் போனோம், என்னென்ன சொதப்புனோங்கிறதுதான் சுவாரசியம். குடும்பஸ்தர்களின் பிக்னிக்கைத் தீர்மானிப்பதே குழந்தைகள்தான். எந்த ஊரை பிளான் பண்ணினாலும், “அங்க பார்க் இருக்குதா?” என்பார்கள். ஓட்டல் புக் பண்ணுனாக்கூட, “நீச்சல்குளம் மட்டும் இல்லியோ...” என்று மிரட்டுவார்கள். பார்த்துப் பார்த்துப் போனாலும், பார்க்கில் எல்லாம் உடைந்து கிடக்கும். நீச்சல் குளத்தை காலியாகப் போட்டு, ‘அண்டர் மெயின்டனென்ஸ்’ என்று போர்டு வைத்திருப்பார்கள். பிள்ளைகள் நம் தலைமுடியைப் பிடித்து உலுக்குவார்கள்.

ஏற்கெனவே, “வீடு காலி பண்றீங்களா சார்?”னு பக்கத்து வீட்டுக்காரர்கள் கேட்கிற அளவுக்கு லக்கேஜ் எடுத்து வெச்சிருப்போம். இதுல குட்டீஸ் ரெண்டும், “எங்களுக்கும் தனித்தனி பேக் வேணும்”னு கேட்டு, அதில் பொம்மைகளை அள்ளிச் செருகுவார்கள். போதாக்குறைக்கு, தங்களது தலையணை பெட்சீட்களையும் அள்ளிச் சுருட்டி நம் தலையில் கட்டுவார்கள். அங்கே போய்ப் பார்த்தால், டிரைவருக்கு (அதாங்க குடும்பத் தலைவர்) ஜட்டி, பனியன் கூட எடுத்து வெச்சிருக்க மாட்டாங்க. கார்ல நல்லா தூங்கிட்டு, ரூமில் நள்ளிரவிலும் ஆட்டம் போட்டு நம்மைத் தூங்கவிடாமல் அட்ராசிட்டி பண்ணுவார்கள். மனைவியிடம் கத்தினால், “எப்பப்பாரு சிடுசிடுன்னுகிட்டு. தூங்குறதுக்குதான் பிக்னிக் வந்தீங்களா?” என்று எகிறி அடிப்பாள்.

பேச்சுலர்கள் பிக்னிக் வேற ரகம். முதல்ல ஒரு வாட்ஸ் அப் குரூப் ஆரம்பிப்பாங்க. குரூப் ஆரம்பிச்சதும் முப்பது பேரும் ‘சூப்பர்’, ‘வாவ்’ என்று உற்சாகமாக ‘சாட்’ செய்வார்கள். தேதி ஃபிக்ஸ் பண்ணியதும், ஒருத்தன் ஆரம்பிப்பான், “மாப்ள அன்னைக்கு ரொம்ப முக்கியமான வேலை இருக்கு” என்று. அதே காரணத்தைச் சொல்லி ஐந்தாறு பேர் கழன்று கொள்வார்கள். அடுத்து இன்னொருத்தன், “மச்சான் பட்ஜெட் எவ்ளோ?” என்று கேட்பான். 800 ரூபாய்தான் சொல்வோம். அதுக்கே, “அடேங்கப்பா” என்பான். 100 ரூபாய் கேட்டாலும் அதைத்தான் சொல்வான். “எவனாச்சும் கைக்காசு போட்டுக் கூட்டிக்கிட்டுப் போகக்கூடாதா?” என்பதுதான் அதன் மறைபொருள். கடைசியில் 10 பேர்தான் பிக்னிக் வருவார்கள். இவர்களை நம்பி கைக்காசு போட்டு ரயில் டிக்கெட் புக் பண்ணினால், அட்மின் செத்தான்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE